வழிபாடு

திருவண்ணாமலையில் 25 லட்சம் பேர் குவிகின்றனர்: சித்ரா பவுர்ணமி கிரிவல ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2023-05-02 05:43 GMT   |   Update On 2023-05-02 05:43 GMT
  • 4 மற்றும் 5-ந்தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது.
  • திருவண்ணாமலையில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் வரும் 4 மற்றும் 5-ந்தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது.

வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகைத்தருவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .

இதற்கு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலில் பொது மக்கள் மற்றும் பக்தர்களுக்கு இலவச தரிசனம் , ரூ .50-க்கான சிறப்பு தரிசனம் என இரண்டு பிரிவுக்கும் பக்தர்கள் சிரமமின்றி செல்வதற்கு தடுப்பு அமைத்துள்ளனர்.

வரிசையாக சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். ராஜகோபுரம், அம்மணியம்மன் கோபுரம், பேகோபுரம் மற்றும் திருமஞ்சன கோபுரம் பகுதிகளில் தூய்மை பணிகள் நடக்கிறது.

கிரிவலபாதை மற்றும் கோவில் பகுதிகளில் அனுமதி பெற்ற பிறகு அன்னதானம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி ஆட்டோ, சுற்றுலா வாகனங்கள், பஸ்கள் ஆகியவை நிறுத்த அனுமதியில்லை.

சாலையோர சிறுவணிகர்கள் அனுமதி மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளவர்கள் மட்டுமே சிறு வணிக கடைகள் அமைக்க வேண்டும்.

இந்த ஆண்டு ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்கள் அமர வைக்கப்பட்டு திட்டி வாசல் வழியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான சோதனை முறையும் செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

குற்ற நிகழ்வகள் ஏதும் நடைபெறாமல் இருக்க பக்தர்கள் பொது மக்களின் பாதுகாப்பிற்காக 5000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக 14 கி.மீ கிரிவலப்பாதையில் தூய்மைப் பணிகள், தற்காலிக கழிவறைகள் அமைக்கப்படுகிறது.

அவசரகால உதவிக்காக மருத்துவக்குழு 108 அவசர கால ஊர்தி மேலும் பல்வேறு மருத்துவ சேவைகளை தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளது. சித்ரா பவுர்ணமியொட்டி தமிழகம் முழுவதும் இருந்து 1,600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இதற்காக திருவண்ணாமலையில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பஸ் நிலையங்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து வருகின்றனர்.

சித்ரா பவுர்ணமி ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் எ.வ வேலு சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். அவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அதன்படி கிரிவலப் பாதையில் பாதுகாப்பு பணிகள் தற்போதே தொடங்கப்பட்டுள்ளது.

அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திற்குள் அனைத்து வசதிகளுடன் மருத்துவ வசதியும் செய்யப்பட்டுள்ளது.

வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் தற்காலிக பஸ் நிலையங்களிலிருந்து கோவிலுக்கும், மற்ற பஸ் நிலையங்களுக்கும் ஆட்டோக்களில் செல்வர்.

இதனால் திருவண்ணாமலை நகருக்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி ஆட்டோக்களில் தனி நபர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு கலெக்டர் முருகேஷ் அறிவித்துள்ளார்.

மேலும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04175 232266 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களின் நலன் கருதி கட்டணமில்லா பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதைக்கு வருவதற்கு இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

முக்கியமான இடங்களில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 20 கட்டணமில்லா பஸ்கள் மற்றும் திருவண்ணாமலை நகர தனியார் பள்ளி நிர்வாகம் மூலம் கட்டணமில்லா பள்ளி வாகனங்கள் இயக்கப்பட உள்ளது.

பக்தர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News