ராமநாதபுரம் அருகே புனித மூவரசர் ஆலய திருவிழாவில் தேர்பவனி
- பிரமாண்டமான கொடி இறக்கம் நடைபெற்றது.
- இதில் திரளானோர் பங்கேற்றனர்.
குழந்தை ஏசு பிறந்ததும் அவரை காணச்சென்ற 3 அரசர்களான புனித கஸ்பார், புனித மெல்கியூர், புனித பல்த்தசார் ஆகியோரின் நினைவாக ராமநாதபுரம் அருகே உள்ள பி.முத்துச்செல்லாபுரம் பகுதியில் மூவரசர் ஆலயம் அமைந்துள்ளது. மிகப்பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் கிறிஸ்துமஸ் திருவிழாவையொட்டி புனித மூவரசர் திருக்காட்சி பெருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இதன்படி இந்த ஆண்டு மூவரசர் திருக்காட்சி பெருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலயம் முன்புறம் அமைந்துள்ள பிரமாண்ட கொடிக்கம்பத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் நடைபெற்று நேற்று முன்தினம் 7-ந் தேதி மாலை திருவிழா திருப்பலியும், புனிதர்களின் ஆடம்பர தேர்பவனியும் நடைபெற்றது.
அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இரவை பகலாக்கும் வகையில் வாணவெடி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று காலை பெருவிழா புதுநன்மை மற்றும் கூட்டுத்திருப்பலியும் நடைபெற்றதோடு மாலையில் பொங்கல் வைக்கும் வைபம் நடந்தது. விழாவின் நிறைவாக நேற்று மாலை ஆலயம் முன்பு ஏற்றப்பட்ட பிரமாண்டமான கொடி இறக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் திருவரங்கம் பங்குத்தந்தை செபஸ்தியான், உப பங்குத்தந்தை ஜான் கமிலஸ் மற்றும் முத்துச்செல்லாபுரம் அருட்தந்தைகள், அருட்சகோதரிகள், கிராம இறைமக்கள் கலந்து கொண்டனர்.