வழிபாடு

தர்ப்பண பூஜை

Published On 2023-08-16 06:25 GMT   |   Update On 2023-08-16 06:25 GMT
  • தர்ப்பண பூஜை என்பது இறந்த நம் முன்னோர்களுக்காக நாம் செய்யும் பூஜை
  • தர்ப்பண பூஜை முறைக்கு வெவ்வேறு விதமான சிறப்பு பெயரும் உண்டு.

தர்ப்பண பூஜை என்பது இறந்த நம் முன்னோர்களுக்காக நாம் செய்யும் பூஜைகள் ஆகும். நம் மூதாதையர்கள் எல்லாருமே பித்ரு லோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்லி விட முடியாது.

மனிதனாக, புல், பூண்டாக, விலங்குகளாக, தாவரங்களாக பலர் பிறப்பெடுக்கலாம். அவரவர் தீவினை கர்மங்களுக்கு ஏற்ப ஆவி ரூப பிறவிகளும் கொண்டிருக்கலாம்.

நம் மூதாதையர்களான பித்ருக்கள் அனைவரும் நினைத்தபடி எல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, இறந்த திதி, மாதப்பிறப்பு, மாளய பட்ச நாட்கள் போன்ற புனித தினங்களில் மட்டும் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றனர்.

எனவே, அவர்கள் சூட்சும தேகத்தில் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் தர்ப்பண பூஜைகளைத் செய்தால் அவர்கள் அவற்றை இங்கு நேரடியாக பெற்று ஆசி அளிப்பார்கள்.

தர்ப்பண பூஜை நாட்களில் நாம் யாருக்காக, எந்த காரணத்துக்காக தர்ப்பணம் அளிக்கின்றோமோ, அதை பொறுத்து தர்ப்பண பூஜை முறைகள் மாறுபடுகின்றன. ஒவ்வொரு தர்ப்பண பூஜை முறைக்கும் வெவ்வேறு விதமான சிறப்புப் பெயரும் உண்டு.

அதைப்போலவே இறந்தவருடைய வாழ்க்கை முறை, செய்து வந்த தொழில், உத்தியோகம், அவரது உயிர் பிரிந்த விதம் இவ்வாறு எத்தனையோ காரண, காரியங்களைக் கொண்டு அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதற்கான வெவ்வேறு விதமான தர்ப்பண பூஜை முறைகளை சித்த புருஷர்கள் அருளியுள்ளனர்.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் முடிவு எவ்வாறு அமையும் என்பதை யாராலும் யூகிக்க இயலாது. விபத்து, தற்கொலை, உறவினர், நண்பர்கள் தரும் வேதனைகள், வறுமை, கொடிய நோய் போன்ற பல காரணங்களால் மரணம் ஏற்படுவ துண்டு. ஏன், நம் தினசரி வாழ்க்கையில் கூட எத்தனையோ கொசுக்கள், வண்டுகள், ஈக்கள், புழு, பூச்சிகள், எறும்புகள் போன்ற எத்தனையோ உயிரினங்களின் மரணத்திற்கு நாம் காரணமாகி விடுகின்றோம்.

நாம் முறையாக நம் பித்ருக்களுக்கு சிரார்த்தம், திவசம் மற்றும் தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றினால் தான் இவ்வாறாக வித விதமான முறைகளில் உயிர் விட்ட அனைத்து ஜீவன்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் எந்த அளவிற்கு நம்முடன் வாழ உரிமை பெற்றிருக்கும் சக ஜீவன்களின் நல்வாழ்விற்காக நாம் மனுதாலும், உடலாலும் சேவை, பூஜை, வழிபாடு, தான தர்மங்கள் ஆகியவற்றைச் செய்கின்றோமோ, அந்த அளவிற்கு நம் வாழ்க்கையும் மேம்படும்.

தற்காலத்தில் அனைவரும் சிரார்த்தத்துக்கும், தர்ப்பணத்துக் கும் வித்தியாசம் தெரியாது இவை இரண்டுமே ஒன்று என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். சிரார்த்தம், தர்ப்பணம் ஆகிய இரண்டு பூஜைகளுமே இறந்த நம் முன்னோர்களின் திதியன்று செய்யப்படுபவை என்றாலும் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.

சிரார்த்தம், திவசம் என்றால் இறந்தோருக்குப் பிரியமான உணவு, உடைகளைப் படைத்து வணங்கிப் பின்னர் அதனை ஏழைகளுக்கு தானமாக வழங்குதல் ஆகும்.

ஆனால் தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு முறையான தர்ப்பண மந்திரங்களைச் சொல்லி வார்த்து பித்ருக்களை திருப்தி செய்தல் என்று பொருள்.

பவானி கூடுதுறை

ஆடி மாதம் அம்மன் மாதம் என்பார்கள். இதர 11 மாதங்களை விட இந்த மாதத்தில் அம்மனை வழிபட்டால் விசேஷ பலன் உண்டு என்று கருதப்படுகிறது. இதனால் ஆடிமாதங்களில் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த பல அம்மன் கோவில்கள் உள்ளன.

இங்கு அம்மனை தரிசிக்க பெண் பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள். பவானி சங்கமேஸ்வரர்-வேதநாயகி அம்மன் கோவிலில் ஆடிவெள்ளி, ஆடிபெருக்கு, ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். ஆடி வெள்ளிக்கு வரும் பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து செல்வார்கள்.

ஆடி 18 அன்று பவானி கூடுதுறைக்கு புதுமண தம்பதிகள் வருகை தந்து தங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்க அம்மனின் அருளாசி பெற்று செல்வார்கள். ஆடி அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்து செல்வார்கள். இதனால் பித்ரு தோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.

பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோயிலின் நடை ஆடிப்பதினெட்டு அன்று அதிகாலையில் திறக்கப்படும். மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும் ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.

Tags:    

Similar News