வழிபாடு

சென்னையில் அம்மன் கோவில் சுற்றுலாவிற்கு குவியும் பக்தர்கள்

Published On 2022-07-20 07:31 GMT   |   Update On 2022-07-20 07:31 GMT
  • ஆடி மாதத்தில் அம்மன் கோவில் தலங்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது.
  • காலை 8.30 மணிக்கு புறப்படும் இந்த ஆன்மிக சுற்றுலா இரவு 7.30 மணிக்கு நிறைவடையும்.

ஆடி மாதம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்தது. இதையடுத்து சென்னை மற்றும் மாநகர் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. அம்மன் பக்தர்கள் வீடுகளில் கூழ் தயாரித்து அம்மனுக்கு படைத்து பொது மக்களுக்கு வழங்கினார்கள்.

தொடர்ந்து ஆடி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இந்த மாதத்தில் பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகமும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து அம்மன் கோவில் தலங்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது.

மாங்காடு, திருவேற்காடு, திருமுல்லைவாயல், புட்டலூர், மயிலாப்பூர், திருவொற்றியூர், பெரிய பாளையம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களுக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 8.30 மணிக்கு புறப்படும் இந்த ஆன்மிக சுற்றுலா இரவு 7.30 மணிக்கு நிறைவடையும். மதியம் உணவு மாங்காடு அம்மன் கோவில் மற்றும் பெரிய பாளையம் அம்மன் கோவில்களில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

அம்மன் கோவில்களுக்கு ஒரே நாளில் அழைத்து செல்லப்படும் திட்டத்தில் பக்தர்கள் குவிகிறார்கள். 2 வகையான அம்மன் கோவில் சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை-1 சுற்றுலா திட்டத்திற்கு ரூ.900, சென்னை-2 திட்டத்திற்கு ரூ.700 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் அழைத்து செல்லப்படும் பக்தர்கள் சிறப்பு தரிசனத்தின் கீழ் அம்மனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. சுற்றுலா செல்லும் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

வாரத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் 3 நாட்கள் அம்மன் கோவில் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது.

அம்மன் கோவில் சுற்றுலாவிற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆன்லைனில் முன்பதிவு வேகமாக நடைபெறுவதால் இத்திட்டம் இந்த மாதம் முழுவதும் நடத்தப்படும் என்று அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News