வழிபாடு

பிரிந்த தம்பதிகளை இணைக்கும் மணக்கரைநாதர்

Published On 2024-11-19 04:32 GMT   |   Update On 2024-11-19 04:32 GMT
  • 800 ஆண்டுகள் பழமையான ஆலயமாக கருதப்படுகிறது.
  • மணக்கரையில் வீற்றிருக்கும் இறைவன் என்பதால் மணக்கரைநாதர் என்று அழைக்கின்றனர்.

கோவில் முகப்புத் தோற்றம்

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே உள்ள மணக்கரைநாதர் கோவில், சுமார் 800 ஆண்டுகள் பழமையான ஆலயமாக கருதப்படுகிறது.


திருமணத் தடை, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள அனுமனுக்கு வடைமாலை, வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்து பயனடைந்து வருகின்றனர்.

தென்பாண்டி சீமையை ஆண்டு வந்தான், உக்கிர வழுதி பாண்டியன். அவன் காலத்தில் தாமிரபரணி ஆறு பெருக்கெடுத்து ஓடியது.

ஒரு முறை தாமிரபரணி ஆற்று நீர், கரைகளை கடந்து ஊருக்குள் நுழைந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும், படைவீரர்களும் மன்னனிடம் முறையிட்டனர். மன்னனும் தன் வீரர்களுடன் தாமிரபரணி கரையில் முகாமிட்டான்.

படை வீரர்களையும், பொதுமக்களையும் திரட்டி வந்து, தாமிரபரணியின் கரையை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டான்.

ஆனால் அவனது முயற்சி பலன் அளிக்கவில்லை. இதனால் நிம்மதியின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்தான். அவன் மனமோ இறைவன் மீது நாட்டம் கொண்டது.

ஒரு நாள் மன்னன், தாமிரபரணி கரை ஓரத்தில் லிங்க ரூபத்தில் இறைவனை கண்டான். அந்த லிங்கத்தின் முன்பு மண்டியிட்டான். "தாமிரபரணிக்கு தடைபோட என்னால் இயலவில்லை. ஆனால் இறைவா உன்னால் முடியும்" என லிங்கநாதரை தீர்க்கமாக பற்றிக்கொண்டான்.

பல நாள் அங்கேயே தங்கினான். தினமும் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான்.

ஒரு நாள் இறைவன் அசரீரியாக பேசினார். "உக்கிரவழுதி! உன் பக்தியை மெச்சுகிறேன். மக்களுக்காக நீ படும் வேதனை என்னை ஈர்த்து விட்டது. தாமிரபரணிக்கு கரை அமைக்கும் முயற்சியை, மீண்டும் ஒரு முறை என்னை நம்பி செய். எம் அருளால் உனது முயற்சி வெற்றியாகும்" என்று அருளினார்.

மன்னன் அகமகிழ்ந்து, இறைவனை வணங்கி, தன் படை வீரர்களைத் திரட்டி, தாமிரபரணி நதி நீர் ஊருக்குள் நுழையாதபடி கரை அமைக்கும் பணியில் மீண்டும் ஈடுபட்டான்.

ஊர் முழுக்க தண்டோரா போட்டான். இறைவன் உத்தரவு கிடைத்து விட்டது. இனி என்ன? என ஊர் மக்கள் உற்சாகமாக திரண்டனர்.

இறைவனும் ஒரு குதிரை வீரனாக மக்களோடு மக்களாக தோன்றினார். பலவகையான படை வீரர்களை உருவாக்கினார். மன்னர் படையோடு சிவபெருமான் படையும் தாமிரபரணி கரையில் திரண்டனர்.

நதிக்கரையில் மணலால் கரை அமைத்தனர். மிக வேகமாக வேலை நடைபெறுகிறது. மன்னனுக்கு சந்தோஷம். 'நம் மக்களிடம் இவ்வளவு திறமையா?' என எண்ணி மன்னன் வியந்தான்.

வேலைகள் முடிந்ததும், லிங்கத்தின் முன்னால் வந்த மன்னன் இறைவனுக்கு நன்றி கூறி நின்றான். அப்போது குதிரை வீரனாக இருந்த சிவபெருமான், லிங்கத்துக்குள் சென்று மறைந்தார். அவருடன் வந்த சேனைகளும் மறைந்தன.

"இதுவரை நமக்கு உதவி செய்தது சிவபெருமானும், அவரின் சேனைகளுமா?" என சிவபெருமானின் அருளை எண்ணி மகிழ்ந்தான் மன்னன்.

இறைவன் உறைந்த லிங்க ரூபத்துக்கு, ஆகம விதிப்படி கோவில் அமைத்தான். அவருக்கு 'சொக்கநாதர்' என பெயர் வைத்தான். தொடர்ந்து பூஜைகள் செய்து வழிபட்டான். மக்களும் தவறாமல் வெள்ளத்தில் இருந்து தங்களை காப்பாற்ற தங்களுக்காக மண் சுமந்த சிவபெருமானை வணங்கி நின்றனர்.


மன்னனின் வேண்டுகோளை ஏற்று, சிவனே மணலால் கரை அமைத்ததால் இத்தலம் 'மணல்கரை' எனப்பெயர் பெற்றது. பின் 'மணக்கரை'யாக மருவியது. மணக்கரையில் வீற்றிருக்கும் இறைவன் என்பதால் இவரை 'மணக்கரைநாதர்' என்றும் அழைக்கின்றனர்.

உக்கிரவழுதி மன்னனால் கட்டப்பட்டு, பிற்காலத்தில் கொங்குராயர் என்ற மன்னரால் விரிவுபடுத்தப்பட்டது. திருமணத் தடை, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள அனுமனுக்கு வடைமாலை, வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்து பயனடைந்து வருகின்றனர்.

புதிதாக வீடு கட்டுபவர்கள் சிவபெருமானால் அமைக்கப்பட்ட மணல் கரையில் உள்ள ஆற்று மணலை சிறிது எடுத்துக்கொண்டு போய், தங்களின் புதிய கட்டிடத்துக்குப் பயன்படுத்துகிறார்கள்.

மணக்கரைநாதர், மீனாட்சி உடனாய சொக்கநாதராக வீற்றிருக்கிறார். இவரை மூன்று வாரங்கள் தொடர்ச்சியாக வந்து வழிபாடு செய்தால், திருமண பாக்கியம் கிடைக்கும். திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.

மணவாழ்வில் பிரச்சினை இருந்தால் அதுவும் சரியாகும். பிரிந்த தம்பதிகள் ஒன்றுசேரவும் வாய்ப்பு உருவாகும் என்கிறார்கள். மணக்கரையில் இருக்கும் மற்றொரு ஆலயமான மலைபார்வதி அம்மன் கோவில் மிகவும் விசேஷமானது.

அமைவிடம்

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலூகாவில் உள்ள மணக்கரைக்கு, திருநெல்வேலி- தூத்துக்குடி சாலையில் உள்ள வல்லநாட்டில் இருந்தும், திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் உள்ள கருங்குளத்தில் இருந்தும் ஆட்டோ மற்றும் பஸ் வசதி உண்டு.

Tags:    

Similar News