null
மகத்துவம் வாய்ந்த கார்த்திகை மாதம் இன்று தொடக்கம்: ஐயப்பன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடு
- மாலை அணிபவர்கள் குறைந்தது ஒரு மண்டலம் அல்லது 41 நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள்.
- மகர ஜோதி தரிசனம் செல்பவர்கள் 60 நாட்கள் விரதம் இருப்பார்கள்.
பக்தி மணம் வீசும் மகத்துவம் வாய்ந்த கார்த்திகை மாதம் இன்று பிறந்தது. அதுவும், பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமையில் கார்த்திகை பிறந்ததால் கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது. இனி 60 நாட்கள் தமிழகத்தில் 'சாமியே சரணம் ஐயப்பா' என்ற சரண கோஷம் ஒலிக்க உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 1-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்துக்காக மாலை அணிந்து செல்கிறார்கள். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்று வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தில் பெரும்பாலான பக்தர்கள் இன்று முதல் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ளர். தங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று குருசாமி, கோவில் குருக்கள் முன்னிலையில் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க மாலைகளை அணிந்து கொண்டனர்.
மாலை அணிபவர்கள் குறைந்தது ஒரு மண்டலம் அல்லது 41 நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள். மகர ஜோதி தரிசனம் செல்பவர்கள் 60 நாட்கள் விரதம் இருப்பார்கள். முதல் முறையாக சபரிமலைக்கு செல்பவர்கள் கன்னி சாமியாக கருதப்படுவார்கள். கார்த்திகை முதல் நாளான இன்று ஏராளமானவர்கள் முதல் முறையாக மாலை அணிந்தனர்.
மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்காக அண்ணாநகர் ஐயப்பன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கும், கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
பக்தர்கள் எந்தவிதமான சிரமமும் இன்றி, மாலை அணிந்து செல்வதற்கு ஐயப்பன் கோவில்களில் தனி வரிசைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அம்பத்தூர், மாதவரம், மூலக்கடை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள ஐயப்பன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அதனைத்தொடர்ந்து கோவில்களில் விஷேச பூஜைகள் நடத்தப்படுகிறது. தொடர்ந்து கார்த்திகை மாதம் முழுவதும் பஜனைகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, விரதத்துக்கான பூஜை பொருட்கள் விற்பனை சென்னையில் நேற்று களைகட்டியது. துளசி, சந்தன, மணி மாலைகளை ஐயப்ப பக்தர்கள் வாங்கி சென்றனர். தேங்காய், பழம், சந்தனம், குங்குமம் மற்றும் இருமுடிக்கான பை விற்பனையும் அமோகமாக இருந்தது.
ஐயப்பன் உருவம் பொறித்த டாலர்கள், சிவப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு, நீலம், காவி போன்ற வண்ண வேட்டிகளின் விற்பனையும் களைகட்டியது. சென்னை மயிலாப்பூர், புரசைவாக்கம், தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் ஏராளமானவர்கள் பூஜைக்குரிய பொருட்களை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.