வழிபாடு

பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

Published On 2024-09-30 04:40 GMT   |   Update On 2024-09-30 04:40 GMT
  • 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி.
  • சோதனை செய்த பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

வத்திராயிருப்பு:

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 3-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி சென்னை, மதுரை, கோவை, தூத்துக்குடி, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வாகனங்களில் பக்தர்கள் வருகை தந்து தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

காலை 6.15 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் உடைமைகளை வனத்துறையினர் சோதனை செய்து பாலித்தீன் கேரிப்பை போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

அதோடு மது மற்றும் போதை வஸ்து பொருட்கள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என சோதனை செய்த பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

காலையில் வெயில் இல்லாமல் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் பக்தர்கள் வேகமாக மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதியில் சரிவர மழை பெய்யாததால் தாணிப்பாறையில் உள்ள வழுக்குப் பாறையில் தண்ணீர் இன்றி காட்சி அளிக்கிறது.

புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி இன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

மொட்டை உள்ளிட்ட நேர்த்தி கடன்களை பக்தர்கள் செலுத்தினர். காலாண்டு விடுமுறை தினமாக இருந்தும் மழை பெய்தால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் பக்தர்கள் கூட்டம் ஓரளவு குறைந்து காணப்பட்டது.

நாளை மறுநாள் மகாளய அமாவாசை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 3-ந் தேதியுடன் 4 நாள் அனுமதி முடிவடைகிறது.

Tags:    

Similar News