தியாகராயநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோவிலில் குவியும் பக்தர்கள்
- கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் 41 நாட்கள் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்யலாம்.
- காலை 7½ மணி முதல் இரவு 9 மணி வரை தரிசனத்துக்கு அனுமதி.
சென்னை தியாகராயநகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிதாக பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் கடந்த 17-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து தற்போது 41 நாட்கள் மண்டல அபிஷேக பூஜை தொடங்கி நடந்து வருகிறது. பத்மாவதி தாயார் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
புதிதாக கட்டப்பட்ட பத்மாவதி தாயார் கோவில் என்பதால் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் தினமும் காலை 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை இடையில் 1½ மணி நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதன்படி தினமும் காலை 7.30 மணியில் இருந்து பகல் 11.30 மணி வரையிலும், மதியம் 12 மணியில் இருந்து மாலை 6 மணி வரையிலும், இரவு7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
மண்டல அபிஷேக பூஜை நிறைவடைந்ததும், வேதவிற்பன்னர்கள் 1,000 கலசங்கள் வைத்து கலச பூஜை செய்கின்றனர். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட மூலஸ்தானம் மற்றும் ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களில் புனித தீர்த்தம் தெளிக்கப்படுகிறது.
கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் 41 நாட்கள் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்யலாம். அதனை தொடர்ந்து வரும் நாட்களிலும் தரிசனம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளூர் ஆலோசனைக்குழு செய்து உள்ளதாக அதன் தலைவர் ஏ.ஜெ.சேகர் ரெட்டி தெரிவித்தார்.