குழிச்சாணி தர்மசாஸ்தா கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழாவில் சந்தனகுட பவனி நாளை மறுநாள் நடக்கிறது
- நாளை அபிஷேகம், உச்ச பூஜை, அன்னதானம் நடக்கிறது.
- 21-ந் தேதி அபிஷேகம், கணபதி ஹோமம் நடைபெறும்.
அருமனை குழிச்சாணி தர்மசாஸ்தா கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்து 18-வது ஆண்டு விழா நேற்று தொடங்கியது. விழாவின் முதல்நாள் காலையில் பள்ளி உணர்த்தல், அபிஷேகம், கணபதி ஹோமம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை மாவட்ட சேவா பாரதி தலைவர் ராஜேஷ்வரன் திறந்து வைத்தார். தொடர்ந்து சமய வகுப்பு மாணவ, மாணவியருக்கான பண்பாட்டுப் போட்டிகள், திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையை ராஜம் நடத்தினார்.
இதனை டாக்டர் ஷெர்ளி ராஜன் தொடங்கி வைத்தார். 2-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் பள்ளி உணர்த்தல், அபிஷேகம், கணபதி பூஜை, தீபாராதனை, காலை 9 மணிக்கு சுமங்கலி பூஜை, மதியம் அன்னதானம் நடக்கிறது. விழாவில் 3-ம் நாளான நாளை (திங்கட்கிழமை) காலையில் பள்ளி உணர்த்தல், அபிஷேகம், தீபாராதனை, பகல் 12 மணிக்கு உச்ச பூஜை, அன்னதானம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு நடக்கும் சமய மாநாட்டிற்கு கலர் ராஜசேகர் தலைமை தாங்குகிறார்.
பிபின் சுரேஷ் சிறப்புரை ஆற்றுகிறார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் மாறுவேட போட்டி, இரவு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4-ம் நாளான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலையில் பள்ளி உணர்த்தல் அபிஷேகம், கணபதிஹோமம், ரிஷப பூஜை, அஸ்டாபிஷேகம், தீபாராதனை, மதியம் உச்ச பூஜை, அன்னதானம் நடைபெறும். மாலை 4 மணிக்கு சந்தன குட பவனி, இரவு புஷ்பாபிஷேகம் நடைபெறும்.
5-ம் நாள் விழாவான 21-ந் தேதி (புதன்கிழமை) காலையில் அபிஷேகம், கணபதிஹோமம் ஆகியவை நடைபெறும். மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது. மாலையில் பரிசு வழங்கல், இரவு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.