வழிபாடு

வெற்றிலையின் மகத்துவம் என்ன தெரியுமா மக்களே?

Published On 2024-08-16 15:19 GMT   |   Update On 2024-08-16 15:19 GMT
  • வெற்றிலையுடன் சுண்ணாம்பு, பாக்கு சேர்த்து போடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
  • இதனால் நாம் என்ன சாப்பிட்டாலும் விரைவில் செரிமானமாகி விடும்.

ஒரு காலத்தில் சாப்பிட்டவுடன் வெற்றிலை போடும் பழக்கம் என்பது நமது தாத்தா, பாட்டிகள் மத்தியில் தவிர்க்க முடியாததாக இருந்து வந்தது.

வெற்றிலையுடன் சுண்ணாம்பு, பாக்கு சேர்த்து போடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். என்ன சாப்பிட்டாலும் செரிமானமாகி விடும்.

சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்போது தாம்பூலம் வைக்கும் பழக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ளது. இந்த தாம்பூல பாத்திரத்தில் வெற்றிலை, பாக்கு இருந்தால் மட்டுமே அது முழுமையான தாம்பூலமாக அமையும். எனவேதான் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கட்டுக்கட்டாக வெற்றிலைகளை வாங்கி தாம்பூல பைகளில் கொடுப்பது வழக்கம்.

இன்றைய இளம் தலைமுறை வெற்றிலையை மறந்து வரும் நிலையில், எத்தனை புது மாப்பிள்ளைகளுக்கு தெரியும் அந்த வெற்றிலையின் ரகசியம் என்பதும் மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது.

மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களால் இன்றைய இளம் தலைமுறை வாலிபர்கள் திருமணத்துக்கு பிறகு இல்லற வாழ்வில் சறுக்கி வருகிறார்கள்.

இளம் வயதிலேயே ஏற்படும் தவறான பழக்க வழக்கங்கள் மற்றும் சவர்மா உள்ளிட்ட சிக்கன் உணவு வகைகள் போன்றவற்றால் ஆண்மைக்குறைவு ஏற்படுவதாக டாக்டர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

இந்த ஆண்மைக்குறைவுக்கு வெற்றிலை அருமருந்து என்பது இன்றைய இளம் தலைமுறைக்கு தெரியாத ஓர் உண்மையாகும். எனவே இன்றைய இளம் தலைமுறை வெற்றிலை போடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது எதை சாப்பிட்டாலும் செரிக்கும் தன்மையை வளர்க்க உதவும்.

வெற்றிலை போட்டால் வாய் மணக்கும். நல்ல மதிய உணவு விருந்துக்குப் பின் வெற்றிலை பரிமாறுவதைப் பாரம்பரியமாகக் கொண்டுள்ளோம்.

முன்பெல்லாம் கோவில் பூஜைகள் முதல் மருந்துகள் வரை வெற்றிலையை பலவிதமாக உபயோகித்து வந்துள்ளோம். இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப் பெறுவதில்லை என்பர்.

இதில் குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரத உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இது அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நிகோடினிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.

வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கு பசி எடுக்கும்.

வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்சனை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் இந்த பிரச்சனைகள் குணமாகி வரும்.

ஒரு வெற்றிலையில் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிய வருகிற சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும்.

கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிடுவதால் இரைப்பை குடல் வலி, அசிடிட்டி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

உடலில் சுரக்கும் 24 விதமான அமினோ அமிலங்கள் வெற்றிலையில் உள்ளன. இந்த அமினோ அமிலங்களை வெற்றிலை மூலம் அடையும்போது ஜீரணம் எளிதாகிறது.

துவர்ப்புச் சுவை கொண்ட பாக்கு மலமிளக்கியாகச் செயல்படும். வயிற்றைச் சுத்தப்படுத்தக் கூடியது. சுண்ணாம்பின் அளவை சற்று அதிகமாக எடுத்துக் கொள்வதால் செரிமான சக்தி சீராவதுடன், உடலுக்குத் தேவையான இயற்கையான கால்சியம் சத்தும் சேர உதவும்.

வெற்றிலை என்பது மவுத்வாஷ் போன்றும் செயல்படும். வாய் துர்நாற்றம் நீங்கவும், பற்களில் கிருமிகள் சேராமல் காக்கவும் இது உதவும். கபம் சேர்வதைத் தடுக்கும். வெற்றிலைக்கு அரச இலை, மாவிலை போன்று தெய்வீக சக்தி உண்டு.

வெற்றிலைக்கு செல்வத்தின் தலைமகளாக உள்ள மகாலட்சுமியை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. தீய கர்ம வினைகளையும் இந்த வெற்றிலை அழிக்கும். செல்வமின்மையும் நமது மோசமான கர்மா தான் இவை எல்லாவற்றையும் நிவர்த்தி செய்ய வெற்றிலையை பயன்படுத்தலாம் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News