வழிபாடு

இன்று எறிபத்த நாயனார் குரு பூஜை

Published On 2023-03-09 05:10 GMT   |   Update On 2023-03-09 05:10 GMT
  • எறிபத்த நாயனார் கையில் எப்பொழுதும் ஒரு கோடாலியோடு இருப்பார்.
  • அழுத்தமான சிவபக்தி என்பது தான் இதன் மையப்புள்ளி.

63 நாயன்மார்களில் வன்தொண்டர்கள் உண்டு. அப்படிப்பட்ட தொண்டகளில் ஒருவர்தான் எறிபத்த நாயனார். கையில் எப்பொழுதும் அவர் ஒரு கோடாலியோடு இருப்பார்.

ஒரு முறை அரசனின் பட்டத்து யானை, சிவகாமியாண்டார் என்ற வயதான சிவனடியார் எடுத்து வந்த பூஜை பொருட்களை தட்டி விட, அவர் அழுது கொண்டே நின்றார். அரசன் யானை என்பதால், யானையையோ யானைப் பாகனையோ தண்டிக்கவும் முடியவில்லை. தன் நிலையை நினைத்து வருந்தினார்.

இதனைக் கேள்விப்பட்ட அடுத்த நிமிடம், கோபத்தோடு விரைந்து வந்த எறிபத்தர், அரசனுடைய பட்டத்து யானை என்றும் பார்க்காது யானையையும், யானைப்பாகனையும் தன் கையில் இருந்த மழுவால் (கோடரியால்) தண்டித்தார்.

இந்தச் செய்தியை ஓடிச் சென்று பலரும் அரசிடம் தெரிவித்தனர். சிவனடியார் ஒருவர் இக்கொடுஞ்செயலைச் செய்தார் என்று சொல்ல, அப்படி சிவனடியார் ஆத்திரத் தோடு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று விசாரித்தார். முழுக்கதையையும் அறிந்த புகழ்ச் சோழன், எறிபத்த நாயனார் செயல் சரிதான் என்றும், இதற்குத் தானும் பொறுப்பு என்றும் தன்னையே வாளால் தண்டித்துக் கொள்ள முனைய, எறிபத்த நாயனார், அந்த வாளை வாங்கி தன்னை மாய்த்துக் கொள்ள முயன்றார்.

இவை அத்தனையும் உணர்ச்சி வசத்தால் செய்யப்பட்ட செயல்கள் என்றாலும், இதனுடைய உயிர் துடிப்பாக இருப்பது சிவநிந்தையைப் பொறுக்க முடியாமையும், சிவனுடைய பூஜை அவமதிப்பை தாங்க முடியாமையும், சிவ நெறியிலும் சிவபூஜையி லும் உள்ள மிக அழுத்தமான நம்பிக்கையும் ஆகும். அழுத்தமான சிவபக்தி என்பது தான் இதன் மையப்புள்ளி.

இச்செயல்களை திருவிளையாடலாக நடத்திய சிவபெருமான், இடப வாகனத்தில் உமையம்மையாரோடு தோன்றி, இவர்களை எல்லாம் மறுபடியும் உயிர்ப்பித்து அருளினார்.

Tags:    

Similar News