வழிபாடு

விநாயகரை வணங்குவதற்கு ஏற்ற விரத நாட்கள்

Published On 2023-09-15 04:21 GMT   |   Update On 2023-09-15 04:21 GMT
  • செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு.
  • சதுர்த்தி விரதம் அன்று விநாயகர் அகவல், விநாயகர் காயத்ரி பாராயணம் செய்வது சிறப்பு.

விநாயகரை தினமும் எந்த நேரத்திலும் வணங்கலாம் என்றாலும் அவரை குறிப்பிட்ட நாட்களில் வணங்குவதன்மூலம் அவரின் அன்பைப் பெறலாம். வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி, மார்கழி மாத வளர்பிறை சஷ்டி ஆகிய நாட்களில் விரதமிருந்து அவரை வழிபட்டால் அனைத்துவிதமான பேறுகளையும் பெறலாம்.

விநாயகரை அவிட்ட நட்சத்திரத்தன்று நெல் பொரியால் அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்து வணங்குவதுடன் ஏழைப்பெண்களுக்கு முடிந்த வரை தானங்கள் செய்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும். அவிட்டம் நட்சத்திரத்தன்று வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு பொரியை நைவேத்தியமாகப் படைத்து அதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் தொழிலில் நல்ல லாபம் அடையலாம்.

விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அந்தப் பாலை அருந்திவிட்டு எந்த ஒரு இடத்துக்கும் சென்றால் அங்கு உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியும். சென்ற வேலையில் வெற்றி உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்துவகை எண்ணெய்களால் பஞ்சதீபம் ஏற்றி விநாயகரை வழிபட்டால் பெண்கள் ஆசைபட்டபடி இல்லற வாழ்வு அமையும்.

செய்யும் தொழில் செழிப்பாக இருக்கும். பூச நட்சத்திரத்தன்று விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் விளைச்சல் பெருகி விவசாயம் தழைக்கும், உறவினர்கள் மனம்மகிழ்ந்து உதவி புரிவார்கள். மூல நட்சத்திரத்தன்று விநாயகருக்கு பால்கோவாவை நைவேத்தியமாகப் படைத்தால் பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை நடக்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தன்று விநாயகருக்கு கோதுமையால் செய்யப்பட்ட அல்வாவை படைத்து வணங்கி வந்தால் அபாண்டமாக பழிசுமத்தப்பட்டு பதவியை இழந்தவர்கள், மீண்டும் இழந்த பதவியையும், மனநிம்மதியையும் பெறுவார்கள்.

செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சனிப்பிரதோஷத்தைப்போல் மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விரதத்தை பார்வதி தேவியில் இருந்து, பஞ்சபாண்டவர்கள் வரை கடைப்பிடித்துள்ளனர். சிவபெருமானும் இந்த விரதம் இருந்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விரத தினத்தன்று விநாயகர் அகவல், விநாயகர் காயத்ரி போன்றவற்றை பாராயணம் செய்து பயன்பெறலாம்.

Tags:    

Similar News