விக்னம் தீர்க்கும் விநாயகர் வழிபாடு
- பிள்ளையாருக்கு ‘விக்னகர்த்தா’ என்ற பெயரும் உண்டு.
- `விக்னம்’ என்பதற்கு ‘இடையூறு’ என்று பொருள்.
விநாயகரை கும்பிட்டால் விக்கினம் தீரும் என்பது நம்பிக்கை. 'விக்னம்' என்பதற்கு 'இடையூறு' என்று பொருள். இந்த இடையூறுகளை நீக்குவதற்கு, விநாயகர் வழிபாடு முக்கியமான ஒன்று.
எந்த காரியத்தை தொடங்கும் போதும் பிள்ளையாரை வழிபட்டு தான் தொடங்குகிறோம். அப்படித்தான் தொடங்க வேண்டும் என்பது, இந்து சமயம் சொல்லும் ஆகம விதி. பிள்ளையாருக்கு 'விக்னகர்த்தா' (விக்னங்களை உண்டாக்குபவர்), 'விக்னேஸ்வரன்' (விக்னங்களை நீக்குபவர்) என்ற பெயரும் உண்டு.
நாம் ஒரு காரியத்தை தொடங்கும் போது அந்த காரியம் எந்த தடையும் இன்றி நன்கு நடைபெற வேண்டும் என்று நினைப்போம். அந்த நினைப்பை வணங்குதலாக, விநாயகரை நோக்கி வைக்க வேண்டும். விநாயகரை வழிபடாது தொடங்கும் காரியங்களில் இடையூறுகள் ஏற்படும் என்பதை பல புராணக் கதைகள் நமக்கு சொல்கின்றன.
வள்ளியை மணம் முடிக்கச் சென்ற முருகப்பெருமான் கதை நம்மில் பலருக்கும் தெரியும். வள்ளியை மணம் முடிக்கும் அவசரத்தில், அவர் தன் அண்ணனான விநாயகரை வணங்காமல் சென்று விட்டார். வள்ளியை மணம் முடிக்க அவர் வேடனாக, வேங்கை மரமாக, கிழவனாக என்று பல உருவங்கள் எடுத்தும் அவரது முயற்சி பலிக்கவில்லை.
அப்போது நாரதரின் மூலமாக தன் அண்ணனை வழிபடாமல் வந்த விஷயம் தெரியவர, உடனடியாக விநாயகரை நினைத்து வழிபட்டார் முருகப் பெருமான். அப்போது யானை வடிவில் வந்த விநாயகர், முருகப்பெருமானையும், வள்ளியையும் சேர்த்து வைத்தார்.
இதேபோல ஒவ்வொரு கடவுளரும், விநாயகரை வணங்க மறந்த போதெல்லாம் அவர்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டதை நமது புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
விநாயகரை திருப்திப்படுத்த ஒரு அச்சுவெல்லம், ஒரு கை பொரி, ஒரு பிடி அவல் மட்டுமே போதுமானது. இவற்றைக் கொண்டு விநாயகரை நினைத்து, தலையில் குட்டிக்கொண்டு 'சுக்லாம் பரதரம்..' என்ற சுலோகத்தை சொல்லி வழிபட்டால், அவர் உடனடியாக நம்மை தேடி வந்து நன்மைகளைச் செய்வார்.