குழந்தையின்மை நீங்கி புத்திர பாக்கியம் பெற...
- வேறு எங்கும் இல்லாத எளிமையான திருக்கோலத்தில் தல சயன பெருமாள் காட்சியளிக்கின்றார்.
- பன்னிரண்டு ஆழ்வார்கள் இக்கோயிலில் தனித்தனி சன்னதிகள் உள்ளன.
108 திவ்ய தேசங்களில் 63வது தேசமாக விளங்கும் மாமல்லபுரம் தல சயன பெருமாள் கோயில். காஞ்சிபுரம் மாவட்டம் உலக வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலா ஸ்தலமான மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது 108 திவ்ய தேசங்களில் 63 வது தேசமாக விளங்கும் தலசயன பெருமாள் கோவில்.
சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் கிபி 14ஆம் நூற்றாண்டில் விஜய நகர மன்னர்களில் ஒருவரான பரங்குசண் என்கிற மன்னன் ஆகம விதிப்படி இக்கோயிலைக் கட்டி பெருமாளை வழிபட்டு வந்ததாகத் தல வரலாறு கூறுகிறது.
இவ்வாலயத்தின் மூலவராகத் தலசயனப் பெருமாள் படுத்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். தாயாராக நிலமங்கை தாயாரும் காட்சி அளித்து வருகிறார். இந்த பெருமாள் தன் வலது கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இதனால் தலத்தில் உள்ள பெருமாளைத் தரிசித்தால் திருப்பாற்கடல் வைகுண்ட நாதனைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தலம் 12 ஆழ்வார்களில் பூதத்தாழ்வார் ஆதரித்த தலமாகக் கூறப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க புண்டரீக மகரிஷி பாதம் பட்ட இந்த புஷ்கரணி தெப்பக்குளத்தில் மாசி மகத்தன்று தல சயன பெருமாளுக்குத் தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது.
மூலஸ்தானத்தில் நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீதேவி பூதேவி இல்லாமல் படுத்த நிலையில் வேறு எங்கும் இல்லாத எளிமையான திருக்கோலத்தில் தல சயன பெருமாள் காட்சியளிக்கின்றார். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும், சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும், திருமணத் தடைகள் நீங்கி திருமண பாக்கியம் உண்டாகும், குழந்தையின்மை நீங்கி புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பன்னிரண்டு ஆழ்வார்கள் இக்கோயிலில் தனித்தனி சன்னதிகள் உள்ளன. இந்த கோயிலில் தல விருட்சமாகப் புன்னை மரமும், தல தீர்த்தமாகப் புண்டரீக புஷ்கரணி தீர்த்தமும் அமைந்துள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்களால் மங்களா சாசனம் பாடப்பட்ட ஸ்தலமாக கூறப்படுகிறது.