வழிபாடு

திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினரை படத்தில் காணலாம்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடத்த ஆயுள் விருத்தி ஹோமங்கள்... திரண்ட பக்தர்கள்...

Published On 2023-04-24 07:36 GMT   |   Update On 2023-04-24 07:36 GMT
  • ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
  • இங்கு இறைவன் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்து அருளினார் என்பது தலவரலாறு.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இக்கோவிலும் ஒன்று. இங்கு அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான இக்கோவிலில் காலசம்ஹார மூர்த்தி உற்சவராக அருள்பாலித்து வருவது சிறப்பம்சமாகும்.

இங்கு இறைவன் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்து அருளினார் என்பது தலவரலாறு. ஆயுள் விருத்திக்காக ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகிறார்கள். மணிவிழா, சதாபிஷேகம் மற்றும் ஆயுள்ஹோமம் உள்ளிட்டவற்றை இங்கு நடத்துவது ஐஸ்வர்யங்களை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த நிலையில் குருப்பெயர்ச்சியையொட்டி நேற்று திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆயுள் விருத்தி ஹோமங்களை நடத்த ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அப்போது 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் ஆயுள் விருத்திக்காக மணிவிழா, சதாபிஷேகம், ஆயுள் ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி உள்ளிட்ட யாக பூஜைகள் மற்றும் திருமணங்களை செய்துகொண்டனர்.

நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம், சன்னதி வீதி, மேலவீதி, கீழவீதி, வடக்கு மடவளாகம், தெற்கு மடவளாகம், கடைவீதி, உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதை கட்டுப்படுத்த பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News