- திருப்புல்லாணியில் அமைந்துள்ளது ஆதி ஜெகநாதர் கோவில்.
- மூலவராக ஆதி ஜெகநாதபெருமாள் வீற்றிருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் அமைந்துள்ளது ஆதி ஜெகநாதர் கோவில். புராண காலத்தில் இந்த ஊரின் பெயர் திருப்புல்லாணை என்று இருந்துள்ளது. இங்கு மூலவராக ஆதி ஜெகநாதபெருமாள் வீற்றிருக்கிறார். உற்சவராக கல்யாண ஜெகநாதரும், அம்பாளாக கல்யாணவல்லி, பத்மாசனியும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோவில் தல விருட்சமாக அரசமரம் அமைந்துள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் இந்த ஆதி ஜெகநாதர் கோவில் 105-வது திருத்தலமாக போற்றப்படுகிறது.
ஜெகநாதப் பெருமாள், புவனேஸ்வர் (புரி) தலத்தில் உத்தர ஜெகநாதராகவும், திருமழிசை தலத்தில் மத்திய ஜெகநாதராகவும், திருப்புல்லாணியில் தட்சிண ஜெகநாதராகவும் காட்சி தருகிறார் என்பர். அந்த அளவில் மிகச்சிறப்பு வாய்ந்தது மட்டுமன்றி, ஆழ்வார்களால் பாடப்பெற்ற திவ்ய தேசங்களில் ஒன்றாவதால் புராதன புண்ணியத் தலமாகவும் திகழ்கிறது இந்த கோவில்.
முன்னொரு காலத்தில் புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல் நிரம்பிய, தற்போது கோவில் அமைந்துள்ள இடமான திருப்புல்லாணி காட்டில் பெருமாளைவேண்டி கடும் தவம் செய்து வந்தனர். 3 மகரிஷிகள் உலக நன்மைக்காக தவம் இயற்றும் பொழுது அரக்கர்களால் துன்புறுத்தப்பட்டனர்.
தங்களை காக்க வேண்டும் என்ற மகரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க எம்பெருமான் மகாவிஷ்ணு முதலில் அரசமர ரூபமாய் அவர்களை காப்பாற்றி பின் ஸ்வரூபமாய் அதாவது சங்குசக்ரதாரியாக அபய முத்திரையுடன் ஆதிஜெகநாத பெருமாளாக காட்சியளித்தார். அந்த திருத்தலமே தற்போது திருப்புல்லாணியில் உள்ள ஆதி ஜெகநாதர் கோவில்.
பிற்காலத்தில் தாயார் பத்மாசனிக்கு தனியாக சன்னதி எழுப்பப்பட்டது. தசரதன் இங்குள்ள பெருமாளின் புத்திர பாக்கிய மூலமந்திர உபதேசத்தை பெற்று, ஸ்ரீ ராம பிரானை மகனாகப் பெற்றெடுத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.