வழிபாடு

புனித ஆரோக்கியமாதா பேராலய பெரிய தேர்பவனி

Published On 2023-09-08 05:21 GMT   |   Update On 2023-09-08 05:21 GMT
  • கீழை நாடுகளின் ‘லூர்து நகர்’ என்ற பெருமையுடன் வேளாங்கண்ணி அழைக்கப்படுகிறது.
  • செப்டம்பர் மாதம் 8-ந் தேதி மாதாவின் பிறந்தநாள்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் வேளாங்கண்ணி பேராலயம் திகழ்கிறது.

கீழை நாடுகளின் 'லூர்து நகர்' என்ற பெருமையுடன் வேளாங்கண்ணி அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய 'பசிலிக்கா' என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயம் வங்கக்கடலோரம் அமைந்து எழில்மயமாக காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும்.

மாதா பிறப்பு திருவிழா

பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த பேராலயத்துக்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து மாதாவை வேண்டிக்கொள்கிறார்கள். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றம் நடைபெறும். அதைத்தொடர்ந்து செப்டம்பர் 8-ந்தேதி வரை 11 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.

கொடியேற்றம்

அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தமிழ், ஆங்கிலம், மராத்தி, கொங்கனி உள்பட பல்வேறு மொழிகளில் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன.

வேளாங்கண்ணியில் உள்ள கீழ்கோவில், மேல்கோவில் ஆகிய இடங்களில் நவநாள்ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்யநற்கருணை ஆசி உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. விழா நாட்களில் தினமும் இரவு 8 மணிக்கு சிறிய தேர்பவனியும் நடந்தது. திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பெரிய தேர் பவனி

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று இரவு கொட்டும் மழையிலும் கோலாகலமாக நடந்தது. தேர்பவனி தொடங்குவதற்கு முன்னதாக தஞ்சை மறை மாவட்ட முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் ஆகியோர் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து முன்னாள் ஆயர் மற்றும் பரிபாலகர் ஆகியோர் பெரிய தேரை புனிதம் செய்து பவனியை தொடங்கி வைத்தனர். ஆரோக்கியமாதா சொரூபம் தாங்கிய பெரிய தேர் இரவு 8 மணி அளவில் பேராலய முகப்பில் இருந்து பவனி வர தொடங்கியது. பெரிய தேருக்கு முன்னால் மிக்கேல் அதிதூதர், புனித செபஸ்தியார், புனித அந்தோணியார், புனித சூசையப்பர், லூர்துமாதா, உத்திரியமாதா ஆகிய 6 தேர்கள் அணிவகுத்து வந்தன.

மரியே வாழ்க கோஷம்

கடற்கரைசாலை, ஆரியநாட்டு தெரு வழியாக பவனி வந்த தேர்களின் பவனி மீண்டும் ஆலயத்தில் நிறைவடைந்தது. தேர் பவனியின்போது திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாதா தேர் மீது பூக்களை வீசி 'மரியே வாழ்க' என கோஷம் எழுப்பி மாதாவை வேண்டி கொண்டனர்.

முன்னதாக பேராலய கலையரங்கில் தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்குத்தந்தையர்தள் டேவிட்தனராஜ், ஆண்டோஜேசுராஜ், ஆரோக்கியவின்டோ.

மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி கார்த்திகா, போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, மற்றும் சர்வமத பிரதிநிதிகள் ரஜதநீலகண்டர் குருக்கள், நாகூர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் கலிபா சாகிபு, நாகூர் தர்கா தலைமை மானேஜிங் டிரஸ்டி சையதுமுகமது ஹாஜி ஹூசைன் சாகிப், சமூக ஆர்வலர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

3 ஆயிரம் போலீசார் குவிப்பு

விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், பேராலயம் மற்றும் பேரூராட்சி சார்பில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சுகாதாரத்துறையின் மூலம் வேளாங்கண்ணியில் 10 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. 3 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

இன்று திருவிழா நிறைவு

இன்று (வெள்ளிக்கிழமை) அன்னையின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காலை விண்மீன் ஆலயத்தில் தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

மாலை திருக்கொடி இறக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பேராலய கீழ்கோவிலில் மாதா மன்றாட்டு, திவ்யநற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுவதுடன் ஆண்டு திருவிழா நிறைவடைகிறது.

Tags:    

Similar News