- மகாவிஷ்ணு, பூமியை காப்பதற்காக வராக அவதாரம் எடுத்தார்.
- பித்ரு தர்ப்பணங்கள் வீட்டில் செய்வது மிகவும் உத்தமம்.
முன்னொரு காலத்தில் மகாவிஷ்ணு, இந்த பூமியை காப்பதற்காக வராக அவதாரம் எடுத்தார். அப்பொழுது அவர் உடலில் இருந்து சிந்திய வியர்வைத் துளிகளே, கருப்பு எள்ளாக மாறியது. அதனால் கருப்பு எள் கொண்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிக மிக புண்ணியமாக கருதப்படுகிறது.
பித்ரு தர்ப்பணங்கள் வீட்டில் செய்வது மிகவும் உத்தமம். என்றாலும், நதிக்கரை, குளக்கரை, கடற்கரைகளில் செய்வது இன்னும் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும். குளக்கரை அல்லது நதிக்கரையில் செய்யும்பொழுது, அங்குள்ள நீரை உபயோகப் படுத்திக் கொள்ளலாம். கடற்கரையில் செய்யும் பொழுது மட்டும் கடலில் உள்ள உப்புநீரை எடுத்து பித்ரு தர்ப்பணம் செய்யக்கூடாது.
மேலும் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்கள் தவிர மற்ற நாட்களில் கடலில் குளிக்கக்கூடாது. (ராமேஸ்வரம் போன்ற புண்ணிய ஆலங்களுக்கு இந்த விதி பொருந்தாது). கடற்கரையில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்கள், முதலிலேயே தங்கள் வீட்டில் இருந்து சுத்தமான நீரை எடுத்துக் கொண்டு செல்வதும், அதில் தர்ப்பணம் செய்வதும் தான் நல்ல பலன்களைத் தரும்.
பொதுவாக குழந்தை பிறந்த தீட்டு அல்லது நம் உறவினர் யாராவது இறந்த தீட்டு இருக்கும் நேரத்தில், அமாவாசை தர்ப்பணம் செய்யக்கூடாது. ஆனால் இந்த விதி சூரிய - சந்திர கிரகங்களுக்கு பொருந்தாது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும்போது சுத்தமான இடத்தில் தரையில் தர்ப்பம் வைத்து செய்வது விசேஷம்.
இது நதிக்கைரயில், குளக்கரையில் சாத்தியம். வீடுகளில் செய்யும் பொழுது ஒரு பித்தளை அல்லது செப்பு தட்டு வைத்து, அதில் கூர்ச்சம் (தர்ப்பம்) வைத்து தர்ப்பணம் செய்வது நன்மை தரும். எவர்சில்வர் தட்டுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவ்வாறு நாம் பித்ருக்களுக்கான கடன்களைச் செய்யும் போது, நமக்கு புகழும், நீண்ட ஆயுளும், பொருளாதார வளர்ச்சியும், சொர்க்கமும் உண்டாகும்.
சத்துருக்களை வெல்வதற்கான சக்தி கிடைக்கும், நம்முடைய குலம் விருத்தி அடையும். தகப்பனார் மற்றும் தாத்தா ஆகியோர் நம்பிக்கை இல்லாமலோ, அலட்சியத்தாலோ தர்ப்பணம் செய்யாமல் இருந்தால், அவர்களின் வாரிசு (மகன்கள்), அமாவாசை தர்ப்பணத்தை செய்வதில் எந்த பலனும் இல்லை. அதே நேரத்தில் ஆரோக்கிய குறைவு காரணமாக மற்றும் வேறு அசவுகரியத்தின் காரணமாக தர்ப்பணம் செய்யாமல் விடுபட்டிருந்தால், அவர்களிடம் இருந்து தர்ப்பையை கொடுத்து - வாங்கி சங்கல்பம் செய்து மகன்கள் தர்ப்பணத்தைச் செய்யலாம்.