வழிபாடு

அட்சய திருதியை விரதத்தினை எப்படி கடைப்பிடிப்பது?

Published On 2024-05-06 08:15 GMT   |   Update On 2024-05-06 08:15 GMT
  • மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழை இலையில் வலதுப்பக்கமாக வையுங்கள்.
  • அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருள் ஒன்று உண்டு.

அட்சய திருதியை தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடுங்கள். பிறகு பூஜை அறையில் கோலமிடுங்கள். அதன்மேல் ஒரு மனைப் பலகையை போட்டு மேலே வாழை இலை ஒன்றினை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரிசியை பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். அதனுள் காசுகளை போடுவது காசுகளை பரப்பி அதன் நடுவே கலசத்தினை வைப்பது எல்லாம் அவரவர் வழக்கப்படி செய்யலாம்.

கலசத்தின் அருகே ஒருபடி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். கலசத்திற்கு பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழை இலையில் வலதுப்பக்கமாக வையுங்கள்.

நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள். அது விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருள் ஒன்று உண்டு. அதிக பலன் தருவதும் அதுதான். உப்பு வாங்கி வைத்தாலே போதும். அஷ்டலட்சுமி கடாட்சம் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.

முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியங்கள். உங்களுக்கு தெரிந்த விஷ்ணு&லட்சுமி, சிவன்&பார்வதி, குபேரன் துதிகளை சொல்லுங்கள். அல்லது கேளுங்கள்.

குசேலரின் கதையை படிப்பது, கேட்பது, சொல்வதும் சிறந்தது. பின்னர் அவரவர் வழக்கப்படி தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது.

அன்றைய தினம் மாலையில் சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்கு சென்று தரிசியுங்கள். அதன் பின்னர் மீண்டும் தூப, தீப ஆராதனையை கலசத்துக்கு செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள்.


உண்ணாவிரதம் இருப்பது எளிய திரவ ஆகாரம் மட்டும் உண்பது எல்லாம் அவரவர் வசதி, உடல்நலத்தை பொறுத்தது. கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம். பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காயை அடுத்து வெள்ளிக்கிழமை பூஜையில் உடைத்து பொங்கல் செய்யலாம். நெல்லை ஒரு முடிச்சாகக் கட்டி அரிசிவைக்கும் பாத்திரத்தில் வைத்து விடுங்கள். காசுகளை பீரோவில் வையுங்கள்.

அட்சய திரியை நாளில் விரதம் இருப்பது. பூஜைகள் செய்வது புதிய பொருட்களை வாங்குவது எல்லாவற்றையும் விட முக்கியமானது, தானம் அளிப்பதும், முன்னோர் கடன்களை செய்வதும்தான்.

இல்லோதருக்கு உங்களால் இயன்ற அளவுக்கு உதவுங்கள். பெற்றோர் பெரியோரிடம் ஆசி பெறுங்கள். நீத்தார் கடன்களை அவசியம் செய்யுங்கள்.

Tags:    

Similar News