கந்தனை வழிபட்டால் கல்யாணம் கைகூடும்!
- பங்குனித் திருநாளில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட வேண்டும்.
- தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற நாள், பங்குனி உத்திர திருநாளாகும்.
எத்தனை உத்திர நட்சத்திரங்கள் வந்தாலும் பங்குனி மாதத்தில் வரும் பொழுது, அது பங்குனி உத்திரம்' என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. மாதங்களில் கடைசி மாதம் பங்குனியாக இருந்தாலும், நம்மை முதன்மையான மனிதராக மாற்றுவதற்கும், முக்கியமாக இல்லறம் என்னும் நல்லறத்தை ஏற்பதற்கும் இந்த பங்குனித் திருநாளில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட வேண்டும்.
தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற நாள், பங்குனி உத்திர திருநாளாகும். முருகப்பெருமான்- தெய்வானை திருமணம் நடைபெற்றதும், ராமபிரான் சீதையை மணந்து கொண்டதும், மீனாட்சி அம்மன் சொக்கநாதரை மணந்ததும், ரதிக்காக மன்மதனை சிவபெருமான் எழுப்பித் தந்ததும் இந்த நாளில்தான் என்று புராணங்கள் சொல்கின்றன. தெய்வத் திருமணங்கள் நடந்த பங்குனி உத்திர திருநாளில், நாமும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டால் நமது வாழ்விலும் மறுமலர்ச்சி ஏற்படும். மணக்கோலம் காண வழிபிறக்கும்.
ஏனெனில் ஆறுமுகமும், பன்னிரண்டு கரங்களும் கொண்ட முருகப்பெருமான். கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும் வள்ளல் தன்மை கொண்டவர். இந்த ஆண்டு பங்குனி உத்திரத் திருநாள் 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. மறுநாள் (திங்கள்) காலை 10.59 மணிவரை உத்ரம் நட்சத்திரம் உள்ளது. அன்றைய தினம் வீட்டு பூஜையறையில் வள்ளி - தெய்வானை உடனாய முருகப்பெருமானின் படத்தை வைத்து பஞ்சமுக விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும்.
முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன் மருகனே, ஈசன்மகனே! ஒருகைமுகன் தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்! என்று முன்னோர்கள் பாடியதைப்போல, நாமும் நம்பிக்கையோடு பாடி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
ஒருசிலர் தங்களுக்கான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்ய இயலாமல் தவிர்ப்பார்கள். ஜாதகத்தில் அங்காரக தோஷம், களத்திர தோஷம் அமைந்தவர்களுக்கும், வரன்கள் வாசல் வரை வந்து திரும்பிச் செல்லும். அவர்கள் அனைவரும் பங்குனி உத்திர நாளில், முருகப்பெருமானை வழிபட்டால் நலம் யாவும் சேரும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து முருகனை வழிபட்டால், நன்மைகள் வந்து சேரும்.
வாழ்க்கை வளமாக இருக்க எதையேனும் ஒன்றை நாம் நம்புகிறோம். அந்த நம்பிக்கையை சிவன் மீது மாசி மாதம் மகா சிவராத்திரி அன்று பரிபூரணமாக வைக்கிறோம். தந்தை மீது நம்பிக்கை வைத்த நாம் பங்குனி மாதம் தனயன் முருகன் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். குத்துவிளக்கின் கீழே இடும் கோலம் வெறும்கோலமாக இல்லாமல் 'நடு வீட்டுக் கோலம்' என்று அழைக்கப்படும்.
முக்கோண, அறுங்கோண, சதுரங்கள் அமைந்த கோலங்களாக இருக்க வேண்டும். கோலத்தில் புள்ளி அதிகம் இருந்தால் தான் 'புள்ளி' எனப்படும் வாரிசு பெருகும் என்பார்கள்.
பங்குனி உத்திர வழிபாட்டின் பொழுது மாங்கனி கிடைத்தால் மாங்கனி வைக்கலாம். இல்லையேல் தேன் கதலியோடு, தேனும், தினைமாவும் வைத்து வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலங்களுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது நல்லது.
அன்றைய தினம் சண்முகருக்கு சர்க்கரை அபிஷேகம் செய்தால், அவர் அக்கறையோடு நமக்கு அருள்தருவார். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால், அஞ்சாத வாழ்வை அளிப்பார். பாலும், பன்னீரும் கொண்டு அபிஷேகம் செய்து பார்த்தால் வாழ் நாளை நீட்டித்துக்கொடுப்பார்.