வழிபாடு

கவலையை மாற்றி, வெற்றி வாழ்வை தரும் இயேசு

Published On 2023-06-12 08:42 GMT   |   Update On 2023-06-12 08:42 GMT
  • காட்டு புஷ்பங்களை கவனித்துப் பாருங்கள்.
  • ஆகாயத்துப் பறவைகளை கவனித்துப் பாருங்கள்.

மனிதனுக்கு ஏற்படும் கவலை அல்லது துக்கம் என்பது பல வடிவங்களைக்கொண்டது. நெருங்கியவர்களின் இழப்புகள், தோல்விகள், உதவியற்று தனித்துவிடப்பட்ட நிலைகள், பணி நெருக்கடிகள், பண நெருக்கடிகள், விரும்பிய கல்வி கிடைக்கவில்லை, வேலை கிடைக்கவில்லை, நல்ல வரன் அமையவில்லை, என் சொந்த வீட்டார் கூட என்னை புரிந்து கொள்ளவில்லை... என்று இந்தப்பட்டியல் மிகவும் பெரியதாய் நீளும்.

இவ்வாறு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏதோ ஒரு நிகழ்கால, எதிர்கால கவலைகள் வந்து அவன் மனதை, உடலை வாட்டி வருத்துகிறது.

வேதத்தில், எருசலேமுக்கு அருகில் பெத்தானியா என்ற ஊரில் மார்த்தாள்-மரியாள் என்ற சகோதரிகளுக்கு லாசர் என்ற சகோதரர் இருந்தார். இயேசு இந்த சகோதரிகளிடத்திலும் லாசருவிடத்திலும் அன்பாய் இருந்தார். இந்த லாசரு நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். அப்பொழுது அவனுடைய சகோதரிகள் இயேசுவினிடத்தில் ஆளனுப்பி 'நீர் சினேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான், வந்து சுக மாக்கும்' என்று வேண்டினார்கள்.

இயேசு பெத்தானியாவுக்கு வந்தபோது லாசரு இறந்து, உடல் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டது. மார்த்தாளும், மரியாளும் இயேசுவினிடத்தில் வந்து, "ஆண்டவரே நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் மரித்து இருக்கமாட்டான்" என்று கூறி சத்தமிட்டு அழுதார்கள். அவளோடு கூட இருந்த உறவினர்களும் அழுதார்கள், இயேசுவும் கண்ணீர் விட்டார்.

உடனே இயேசு கல்லறைக்குச் சென்று ''கல்லை எடுத்துப் போடுங்கள்'' என்றார். மரித்தவனுடைய சகோதரிகள் "ஆண்டவரே நாலு நாள் ஆயிற்று நாறுமே" என்றார்கள்.

இயேசு அவளை நோக்கி "நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்" என்றார்.

கல்லறையின் கல்லை எடுத்தார்கள், பின்பு "லாசருவே வெளியே வா" என்று உரத்த சத்தமாய் இயேசு கூப்பிட்டார்.

மரித்தவன் உயிரோடு வெளியே வந்தான். எல்லோரும் மிகவும் களிகூர்ந்து, மகிழ்ந்து சந்தோஷப்பட்டார்கள். கவலையான சூழ்நிலை, சந்தோசமாக, குதூகலமாக மாறியது.

இன்றைக்கு நாமும் வாழ்க்கையில் எல்லாமே இழந்து விட்டோம், இழப்பதற்கு இனி ஒன்றுமேயில்லை என்று கண்ணீரோடு, கவலையுடன் நிற்கும்போது இறைமகன் இயேசுவிடம் கையேந்தினால் நிச்சயம் நம் வாழ்வும் சந்தோஷமாக மாறும்.

இயேசு சொல்கிறார், "கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்". (மத்தேயு 6:27, லூக்கா 12:25).

ஆகாயத்துப் பறவைகளை கவனித்துப் பாருங்கள். அவை விதைக்கிறதுமில்லை, நடுகிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதுமில்லை. ஆனால் அவைகளையும் பரமபிதா எந்த குறைவுமின்றி நடத்துகிறார்.

காட்டு புஷ்பங்களை கவனித்துப் பாருங்கள். அவை நெய்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை. ஆனாலும் அவைகளின் இலைகள், மலர்கள் எவ்வளவு அழகாக மகிமையாக உள்ளது.

இன்றைக்கு இருந்து நாளைக்கு இல்லாமல் போகும் பறவைகள், செடிகளுக்கு தேவன் இவ்வளவு சிறந்ததை தரும் போது அவருடைய சாயலாக உள்ள நமக்கு எல்லாமே நிறைவாக தருவார்.

ஆகவே நாம், நம்முடைய முயற்சியை மட்டும் சரியாக செய்து விட்டு எல்லா கவலைகளையும், வேதனைகளையும், துக்கங்களையும், கண்ணீரையும் இறைவன் மீது வைத்து விடுவோம். மரித்து நான்கு நாளான லாசருவின் சரீரத்தை உயிரோடு எழுப்பிய இயேசு, நிச்சயமாக நம்முடைய வாழ்விலும் உள்ள கண்ணீர், கவலை, துக்கத்தை நீக்கி, நம்மை சந்தோஷமாக மாற்றி ஆனந்த கிரீடத்தை தருவார்.

நெல்லை மானேக்சா.

Tags:    

Similar News