வழிபாடு

உலக மக்களை ரட்சிக்க பிறந்தவர் இயேசு

Published On 2023-12-25 05:50 GMT   |   Update On 2023-12-25 05:50 GMT
  • இயேசு கிறிஸ்துவின் பிறப்பானது உலகம் முழுவதும் அறியலாயிற்று.
  • தூய பரிசுத்த ஆவியால் கன்னி மரியாள் கருவுற்றார்.

உலக மக்களை ரட்சிக்க வந்த இறைமகன் இயேசு கிறிஸ்து, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெத்லகேமில் யோசேப்பு-மரியா தம்பதியருக்கு மகனாக அவதரித்தார்.

இயேசுவின் பிறப்பை அறிவிப்பதற்காக கடவுள், கபிரியேல் எனும் வானதூதரை, கலிலேயாவில் உள்ள நாசரேத் என்னும் ஊரில் உள்ள மரியாளிடம் அனுப்பினார். அப்போது "மரியா... நீர் கடவுளின் அருளை கண்டடைந்துள்ளீர். கருவுற்று ஒரு மகனை பெறுவீர். அவருக்கு இயேசு என்று பெயிரிடுவீர். அவர், உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்" என்று மரியாவிடம் கூறினார் கபிரியேல்.

அந்த காலத்தில், பேரரசர் அகுஸ்து சீசர், தனது பேரரசு முழுவதும் மக்கள் தொகையை கணக்கெடுக்குமாறு உத்தரவிட்டு இருந்தார்.

சிரியா நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராக இருந்தபோது முதன் முறையாக மக்கள்தொகை கணக்கிடப்பட்டது. தங்கள் பெயரை பதிவு செய்ய அவரவர்கள் தங்களது ஊருக்கு சென்றனர்.

தாவீது வழி மரபினரான யோசேப்பும், தான் திருமணம் செய்ய ஒப்பந்தமான மரியாளோடு பெயரை பதிவு செய்ய நாசரேத்தில் இருந்து யூதேயாவில் உள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்கு சென்றார். அப்போது தூய பரிசுத்த ஆவியால் கன்னி மரியாள் கருவுற்றிருந்தார். அங்கு இருந்த போது மரியாளுக்கு பேறுகாலம் வந்தது. அவர் தனது தலைமகனான ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பெற்றெடுத்தார்.

அந்த நாளைத் தான் ஒவ்வொரு டிசம்பர் 25-ந் தேதியும் கிறிஸ்துமஸ் ஆக உலகம் முழுவதும் மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இயேசு கிறிஸ்து பிறந்தபோது, மரியாளுக்கு விடுதியில் இடம் கிடைக்கவில்லை. அதனால், குழந்தையை துணிகளில் பொதிந்து மாட்டுத் தொழுவத்தில் இருந்த தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்தனர்.

அப்போது, அந்த பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி, இரவு முழுவதும் தங்கள் கிடையை காவல் காத்துக்கொண்டிருந்தனர். திடீரென்று வானதூதர் அவர்கள் முன் தோன்றினார். அவர்களிடம், "இதோ... எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றேன். இன்று, ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். அந்த குழந்தையை துணிகளில் சுற்றி மாட்டுத் தீவனத் தொட்டியில் கிடத்தி இருக்கிறார்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்" என்றார்.

வானதூதர் சென்றபின், அந்த இடையர்கள் பெத்லகேம் சென்றனர். வானதூதர் அறிவித்தபடியே, அங்கு இருந்த பாலன் இயேசுவை கண்டு வணங்கினர். இதற்கிடையில், கிழக்கில் இருந்து ஜெருசலேம் வந்த சில ஞானிகள், ஏரோது அரசனிடம், "யூதர்களின் அரசராக பிறந்திருக்கிறவர் எங்கே? அந்த அறிவிப்புக்கான விண்மீன் எழக்கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்" என்றார்கள்.

அரசனும் மறைநூல் அறிஞர்களை அழைத்து, மெசியா எங்கே பிறப்பார் என்று விசாரித்தான். அவர்கள் அவனிடம், "யூதேயாவில் உள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்" என்று கூறினார்கள். தொடர்ந்து, யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டு சென்று விண்மீன் தோன்றிய காலத்தை பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான் மன்னன் ஏரோது. அந்த ஞானிகளிடம், "நீங்கள் சென்று குழந்தையை குறித்து திட்டவட்டமாக எனக்கு தெரிவியுங்கள்" என்றும் கூறி, அவர்களை பெத்லகேமிற்கு அனுப்பினான்.

அவர்கள் பெத்லகேம் சென்றபோது, முன்பு எழுந்த விண்மீன் மீண்டும் தோன்றி அவர்களுக்கு வழிகாட்டியது. அந்த விண்மீனை அவர்கள் பின்தொடர்ந்து சென்றனர். ஓரிடத்தில் அந்த விண்மீன் நின்றதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

இறைமகன் இயேசு பாலகனாக அன்னை மரியாள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருந்ததை கண்டு பெருமகிழ்ச்சி கொண்டனர். தாங்கள் கொண்டு வந்த பேழைகளை திறந்து, அதில் இருந்த பொன், சாம்பிராணி, வெள்ளைப் போளம் ஆகியவற்றை காணிக்கையாக கொடுத்தனர்.

மன்னன் ஏரோதை சந்திக்க மீண்டும் செல்ல வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டு இருந்ததால், அவர்கள் அங்கு செல்லவில்லை. வேறுவழியாக தங்கள் நாடுகளுக்கு திரும்பிவிட்டனர். இவ்வாறாக இயேசு கிறிஸ்துவின் பிறப்பானது உலகம் முழுவதும் அறியலாயிற்று.

Tags:    

Similar News