ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சக்கரத்தாழ்வார், காட்டழகிய சிங்கப்பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்
- மங்கள ஆரத்தி நடைபெற்றது.
- திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறும். அதன்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் கடந்த ஜூன் மாதம் 2-ந் தேதியும், ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 7-ந் தேதியும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 7.15 மணியளவில் புனித நீர் யானை மீது வைத்தும், திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் 11 வெள்ளிக்குடங்களை தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனித நீர் வடக்குவாசல் வழியாக சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு காலை 7.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது.
பின்னர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன.
பின்னர் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை மாலை நடைபெற்றது.
இதேபோன்று ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருவானைக்காவல் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலிலும் நேற்று காலை ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 8 மணியளவில் புனித நீர் யானை மீது வைத்தும், 11 வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனித நீர் வடக்குவாசல், சித்திரை வீதிகள், கீழவாசல் வழியாக கோவிலுக்கு காலை 9.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது.
பின்னர் சிங்கப்பெருமாள் சன்னதியில் மூலவர்கள் லட்சுமிநரசிம்மன், மகாலட்சுமி தாயார், உற்சவர்லட்சுமிநரசிம்மன் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன.
பின்னர் மூலவர்கள் லட்சுமிநரசிம்மன், மகாலட்சுமி தாயார், உற்சவர் லட்சுமிநரசிம்மன் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. பின்னர் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நடைபெற்றது.