- இவரை வணங்கினால் பல இன்னல்களில் இருந்து நம்மை விடுவிப்பார்
- நாய் மீது அமர்ந்த படி மிகவும் பயங்கரமாக காட்சியளிப்பார்.
இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் கால பைரவர் இல்லாத கோவில்களே இல்லை என்று கூறுமளவு மிகவும் பெருமை பெற்றவர் கால பைரவர். இவர் கைகளில் திரிசூலம், உடுக்கை மற்றும் வெட்டப்பட்ட ஒரு தலையுடன், உடலில் சாம்பல் பூசிக் கொண்டு, நாய் மீது அமர்ந்த படி மிகவும் பயங்கரமாக காட்சியளிப்பார்.
இவரை வணங்கினால் பல இன்னல்களில் இருந்து நம்மை விடுவிப்பார் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கை. இவ்வளவு பெருமைமிக்க கால பைரவர் எப்படி அவதரித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள். இங்கு ஸ்கந்த புராணத்தில் கால பைரவர் தோன்றிய கதை குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தேவலோகத்தில் உள்ள தெய்வங்கள் ஒரு முறை பல விஷயங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு தேவதை தெய்வங்களில் உத்தமமானவர் யார் எனக் கேட்க, பிரம்மா சிறிதும் தாமதிக்காமல், இதில் என்ன சந்தேகம் நான் தான் எனக் கூறினார். இதைக் கேட்ட விஷ்ணு பகவான் கோபம் கொண்டார். இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடைப்பெற்றது.
விவாதம் முடிவது போன்று இல்லை. எனவே அவர்கள் வேத அதிபதிகளை அழைத்து, அவர்களின் கருத்தைக் கேட்டனர். வேத அதிபதிகளோ சற்றும் யோசிக்காமல், சிவபெருமான் தான் அனைவரையும் விட உத்தமமானவர் என்று கூறினர். அதைக் கேட்ட பிரம்மா மிகுந்த ஆத்திரம் கொண்டு, சிவபெருமானைக் குறித்து கண்ட படி பேசினார்.
பிரம்மா ஆத்திரத்தில், "யார் அந்த சிவன்? உடல் முழுவதும் தூசி படிந்தவாறு சாம்பல் பூசிக்கெண்டு, கழுத்தில் பாம்பை சுற்றிக் கொண்டு, நீண்ட சடைமுடியுடன், ஒரு மாட்டின் மீது அமர்ந்து சுற்றுகின்றவரா, என்னை விட உத்தமமானவர்? என்று கூறி கொண்டிருக்கையில், கைலாயத்தில் உள்ள சிவனின் காதுகளில் அனைத்தும் விழ, சிவன் மிகுந்த கோபத்திற்கு உள்ளானார்.
பிரம்மாவின் கூற்றைக் கேட்டு, விஷ்ணுவும், பிற கடவுள்களும் பிரமித்து நிற்கையில், மிகுந்த சப்தத்துடன் சிவன் ஒளி வெள்ளமாக தோன்ற, அந்த ஒளி வெள்ளத்தில் ஒரு மனிதன் தோன்றினான். பிரம்மா அம்மனிதனைக் கண்டு யார் நீ என்று கேட்க, அம்மனிதன் சிறு குழந்தையாக உருமாறி அழத் தொடங்கியது.
'ஏய் குழந்தாய், நீ என் தலையில் இருந்து முளைத்ததோடு, என்னை சரணடைந்து அழுவதினால் உனக்கு ருத்ரா என பெயரிடுகிறேன் என்று கூறியதோடு, அழுவதை நிறுத்திவிட்டு உலகைப் படைக்கத் துவங்கு, நான் உன்னைக் காப்பாற்றுகின்றேன் என்று கூறினார் பிரம்மா.
பிரம்மா அவ்வாறு கூறியதும், அக்குழந்தை ஒரு பயங்கரமான உருவத்துடன் உருமாறி, அவர் எதிரில் நின்றது. மீண்டும் பிரம்மா, "ஏய் மனிதா, இவ்வளவு பயங்கரமான உருவத்துடன் வந்து நிற்கும் உன்னை காலத்தைக் காக்கும் மனிதனாக நியமித்து, கால பைரவர் என பெயர் மாற்றுகிறேன்.
நீ மக்களுடைய பாவங்களை ஏற்று, தீயவர்களை அழிப்பதோடு, இறந்தவர்கள் மோட்சம் அடையச் செல்லும் காசிக்கு சென்று காசிராஜனாக இரு என்று கூறி ஆசீர்வதித்தார்.
பிரம்மாவின் கூற்றை இதுவரை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த, அம்மனிதன் பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றைத் துண்டித்து தன் கைகளில் ஏந்தினான். பின் சிவன் தன் உண்மையான உருவத்திற்கு மாறி, பிரம்மாவே உன்னுடைய எந்த தலை என்னை நிந்தித்து பாவத்தைப் பெற்றதோ, அந்த தலையை பைரவர் துண்டித்துவிட்டார் எனக் கூற, அப்போது தான் அனைவருக்கும் வந்திருப்பது சிவன் என்றே புரிய வந்தது. சிவனே தன் மற்றொரு அவதாரமான கால பைரவரைத் தோற்றுவித்துள்ளார்.
பின் சிவன் தன்னால் தோற்றுவிக்கப்பட்ட கால பைரவனிடம் "நீ பிரம்மாவின் தலையைத் துண்டித்ததினால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க, பிரம்மாவின் தலையை ஏந்திக் கொண்டு மூவுலகையும் சுற்றி பிட்சை பெற்றுக் கொண்டவாறு காசியை அடையுமாறு " கூறினார்.
அப்படி சிவன் கூறிக் கொண்டிருக்கையில், பயங்கரமான முகத்துடன் ரத்தம் கக்கிக் கொண்டிருந்த பெண் அங்கு தோன்றினாள். அவளிடம் சிவபெருமான், "நீ கால பைரவன் பின் பயமுறுத்திக் கொண்டே துரத்தி செல், அவன் காசியை அடைந்ததும் பயமுறுத்துவதை நிறுத்திவிடு, உன்னால் காசியில் இருக்க முடியாது என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியினால் தான் காசிக்கு சென்றால் மோட்சம் கிடைக்கும் என்ற பழமொழி வந்தது. இதன் காரணமாகத் தான் இறந்தவர்களுக்கு மோட்சம் கிடைக்க காசியில் உள்ள கால பைரவரை அனைவரும் வணங்குகின்றனர்.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional