கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மாசி மகம் திருவிழா 6-ந்தேதி நடக்கிறது
- திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து மலையை சுற்றி கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
- திரளான பக்தர்கள் அலகு குத்தி மலையை சுற்றி கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடைவரை கோவிலில் மாசி மகம் திருவிழா வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடக்கிறது.
தொடர்ந்து காலை 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து மலையை சுற்றி கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 11 மணியளவில் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து திரளான பக்தர்கள் அலகு குத்தி மலையை சுற்றி கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
மாலை 6 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் சுவாமி வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
விழாவில் மதுரை, ராஜபாளையம், ஸ்ரீ வில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கழுகுமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.