காஞ்சிபுரம் மண்ணில் பல்லி தோஷம் என்பதே கிடையாது
- காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் தங்கம், வெள்ளியால் ஆன பல்லி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- பக்தர்கள் அதைத் தொட்டு வணங்கிச் சென்றால் சகல தோஷங்களும் விலகும்.
ஸ்ரீஸ்ருங்கி பேரர் என்ற முனிவரின் இரண்டு மகன்கள், கவுதம முனிவரிடம் சீடர்களாக இருந்தனர். கவுதமருக்கு அனைத்து பணிவிடைகளையும் இவ்விருவருமே செய்து வந்தனர். ஒருநாள் ஆசிரமத்தில் கௌதமர் பூஜைக்கு தயாராகிக் கொண்டிருந்தார். அந்நேரம் பூஜைக்கு இருவரும் தீர்த்தம் கொண்டு வந்தனர். அந்த தீர்த்தத்தில் பல்லி இறந்து மிதந்து கிடந்தது. இதனால் கோபம் கொண்ட கவுதமர், ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் மகன்கள் இருவரையும் பல்லிகளாக போகக் கடவீர்களாக என சபித்தார்.
தவறை உணர்ந்து விட்டோம் சுவாமி. எங்களை மன்னித்து அருள வேண்டும் சுவாமி, நாங்கள் சாப விமோசனம் பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். அதற்கு கவுதமர், நீங்கள் இருவரும் சத்திய விரத க்ஷேத்திரமான காஞ்சிக்கு சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் வரதராஜப் பெருமாளை வழிபட்டால் சாப விமோசனம் பெறலாம். அதோடு உங்களுக்கு மோட்சமும் கிட்டும் என்று கூறினார்.
இதையடுத்து ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் மகன்கள் இருவரும் காஞ்சிபுரம் வந்து வரதராஜப் பெருமாளை வழிபட்டனர். அவர்களின் பக்தியை மெச்சிய வரதராஜப் பெருமாள் அவர்களுக்கு சாப விமோசனம் அளித்தார். மேலும், இருவரின் ஆத்மா வைகுண்டம் செல்லும். அதே நேரம் உங்களின் சரீரம் பஞ்ச உலோகங்களாக எனக்கு பின்புறம் இருக்கட்டும்.
என்னை தரிசிக்க வருபவர்கள், உங்களையும் தரிசித்து சகல தோஷங்களும் நீங்கப் பெறுவார்கள் என்றும் அருளினார். அதன்படி இந்த ஆலயத்தில் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லி உருவங்கள் பஞ்ச உலோகங்களால் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றுக்கு தங்க முலாமும், மற்றொன்றுக்கு வெள்ளி முலாமும் பூசப்பட்டுள்ளது. பக்தர்கள் அதைத் தொட்டு வணங்கிச் சென்றால் சகல தோஷங்களும் விலகும்.
ஒரு முறை காஞ்சி மகாப் பெரியவர் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு விஜயம் செய்தார். பெருமாளை தரிசித்து விட்டு திரும்புகையில் கோயிலின் இரண்டாவது பிரகாரத்தில் வைத்து அவரது உச்சந்தலை மேல் பல்லி விழுந்தது. பின்னால் வந்த அவரது சீடர் ஒருவர் அதைத் தட்டிவிட்டார். உடனே உடன் வந்த ஊர் பிரமுகர்கள் சுவாமி. உச்சந்தலையில் பல்லி விழுந்தால் மரணம் என்று பல்லி சாஸ்திரம் கூறுகிறதே, இதற்கு பரிகாரம் ஏதும் செய்யக்கூடாதா என்று கேட்டதற்கு. இது சத்திய விரத க்ஷேத்திரம் (காஞ்சிபுரம்). இந்த மண்ணில் பல்லி தோஷம் என்பதே கிடையாது என்று அருளியது குறிப்பிடத்தக்கது.