வழிபாடு

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓணம் சிறப்பு பூஜை 7-ந்தேதி தொடங்குகிறது

Published On 2022-09-06 06:58 GMT   |   Update On 2022-09-06 06:58 GMT
  • ஓணம் சிறப்பு பூஜை 7-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
  • 8-ந்தேதி வெண்பட்டு பகவதி அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓணம் சிறப்பு பூஜை வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி 9-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. 7-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், அபிஷேகம், காலை 8 மணிக்கு ஸ்ரீ பலி பூஜை, உஷ பூஜை, 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

11 மணிக்கு பகவதி அம்மனுக்கு வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள், தங்க கவசம் போன்றவை அணிவிக்கப்பட்டு, சந்தன காப்பு அலங்காரத்துடன், உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி அம்மனுக்கு பச்சை நிறப்பட்டு அணிவித்து தீபாராதனை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மனை பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம் வரச்செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனை எழுந்தருள செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

8-ந்தேதி திருவோண நட்சத்திரத்தையொட்டி கேரள பாரம்பரிய உடையான வெண்பட்டும், 9-ந்தேதி அவிட்டம் நட்சத்திரத்தையொட்டி சிவப்பு நிற பட்டும் பகவதிஅம்மனுக்கு ஓணக் கோடியாக அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News