கரபுரநாதர் கோவிலில் சிவலிங்கத்துக்கு இடைவிடாது தாராபிஷேகம்
- தாராபிசேகத்தின் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.
- தாரா அபிஷேகத்துக்காக பெரும்பாலும் கூம்பு வடிவ செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவார்கள்.
சிவாலயங்களில் கோடை காலங்களில் தாராபிசேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி சிவ லிங்கத்தின் மேல் உறி கட்டி அதில் சிறு துளையுடன் கூடிய மண் கலயத்தைத் தொங்கவிடுவார்கள். அந்த கலயத்திற்குள் வெட்டி வேர், விளாமிச்சை வேர், பச்சிலை, ஜடாமஞ்சி, பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய், கடுக்காய், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்த நீரை நிரப்புவார்கள்.
அந்த நீரின் துளிகள், கலயத்தின் துளை வழியாக லிங்கத்தில் சொட்டு சொட்டாக விழும் வண்ணம் செய்வர். இவ்வாறு ஜல தாரை வைப்பதால் சி வலிங்கம் குளிர்விக்கப்பட்டு மக்களை கோடை வெப்பத்தில் இருந்து காக்கலாம், இயற்கை உபாதைகளோ, பூமி அதிர்வோ ஏற்படாது என்பது நம்பிக்கை.
அதன்படி ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர நாட்களில் ஏற்படும் வெயில் கொடுமையினை தணிக்க சேலம் உத்தம சோழபுரத்தில் அமைந்துள்ள கரபுரநாதருக்கு தாரா பாத்திரத்தில் அபிசேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வழக்கத்தைவிட வெயில் சுட்டெரிப்பதால் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே கரபுரநாதர் கோவில் மூலவர் சிவலிங்கத்தின் மீது தாராபிசேகம் செய்யப்பட்டது. அதன்படி தாராபாத்திரம் அமைக்கப்பட்டு அதில் வெட்டிவேர், பன்னீர், விளாமிச்சவேர், ஏலக்காய், சாதிகாய், பச்சை கற்பூரம் உள்ளிட்ட பலவிதமான மூலிகைகளை கலந்து வைத்து இடைவிடாமல் சுவாமி மீது சொட்டு சொட்டாக நீர் விழுமாறு அமைக்கப்பட்டு அபிஷேகம் நடந்து வருகிறது.
இவ்வாறு இடைவிடாமல் அபிஷேகம் செய்யும்போது நல்ல மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி, அக்னி வெயிலின் தாக்கம் குறைந்து நாடு செழிப்பாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தினசரி நடைபெறும் இந்த அபிஷேகத்துக்கு தேவையான பொருட்களை பக்தர்கள் அளிக்கலாம் என்று கோவில் சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.
இந்த தாரா அபிஷேகத்துக்காக பெரும்பாலும் கூம்பு வடிவ செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவார்கள். அதில் நிரப்பப்படும் தண்ணீரில் பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்படும். அந்த நறுமணத் தண்ணீர் சொட்டு, சொட்டாக விழும் போது, சிவபெருமானின் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியாகி விடுவார்.
தாராபிசேகத்தின் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது. அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் தோன்றியது. இதனால் தேவர்களை காப்பாற்றுவதற்காக சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.
இதன் காரணமாக சிவபெருமானின் உடல் முழுவதும் வெப்பம் பரவியது. அவரது நெற்றிக்கண்ணும் வெப்பத்தால் தகித்தது. இதனால் சிவபெருமான் தலையில் கங்கையையும் நிலாவையும் சூடினார்கள். அப்படி இருந்தும் சிவபெருமானின் உடல் வெப்பம் குறையவில்லை.
இதனால் அவர் உடல் சூட்டை தணிக்க அபிஷேகங்கள் செய்தனர். இடைவிடாது செய்யப்பட்ட அந்த அபிஷேகங்கள் காரணமாக, சிவபெருமான் அபிஷேகப் பிரியராக மாறினார். சிவபெருமானுக்கு நாம் எந்த அளவுக்கு அபிஷேகம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அவர் உடலும், உள்ளமும் குளிர்ச்சியாகி, மனம் மகிழ்ந்து நமக்கு நல்ல வரங்களை தந்தருள்வார் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.