தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
- குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது.
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் வட்டம் காயாமொழி அருகே உள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து பல்ேவறு பூஜைகள் நடைபெற்று வந்தது.
நேற்று முன்தினம் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.
நேற்று அதிகாலை 5 மணிக்கு பூர்ணாகுதி, யாகசாலை பூஜை, காலை 9 மணிக்கு யாகசாலை பூஜையில் இருந்து புனித நீர் எடுத்துச் சென்று விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து 11 மணிக்கு மகா அபிஷேகம், 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, மகேஸ்வரபூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு மாவிளக்கு பூஜை, 8 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பவனி வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சிவகாசி, விருதுநகர் போன்ற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வந்திருந்தனர்.
ஏற்பாடுகளை கோவில் தக்கார் அஜித், ஆய்வாளர் பகவதி, செயல் அலுவலர் காந்திமதி ஆகியோர் செய்து இருந்தனர்.