வழிபாடு

மெய்சிலிர்க்க வைக்கும் தூக்க நேர்ச்சை

Published On 2022-08-18 08:07 GMT   |   Update On 2022-08-18 08:07 GMT
  • கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் 10 நாட்கள் தூக்க திருவிழா நடக்கிறது.
  • அதிகாலையில் தொடங்கி இரவு வரை விடிய, விடிய தூக்க நேர்ச்சை நடைபெறும்.

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை 10 நாட்கள் தூக்க திருவிழா நடக்கிறது. 4 மர சக்கரங்களுடன் கூடிய தேர் போன்று தூக்க வண்டி அமைந்திருக்கும். அந்த தூக்க வண்டியின் உச்சியில் நீளமான இரண்டு களை கம்புகள் (வில்) பொருத்தப்பட்டுள்ளன.

இரண்டு வில்களின் நுனியிலும் குறுக்குவாட்டில் தலா இரண்டு மரச்சட்டங்கள் இருக்கும்.

தூக்க வண்டியில் இருப்போரை தூக்ககாரர்கள் என்று அழைப்பார்கள். ஒவ்வொரு வண்டியிலும் 4 தூக்கக்காரர்களை மார்பிலும், இடுப்பிலும் துணியால் கட்டி அந்த மரச்சட்டங்களில் தொங்கவிடுவார்கள். தொங்கிக் கொண்டிருக்கிற ஒவ்வொரு நபரின் கைகளிலும் தலா ஒரு பச்சிளம் குழந்தை.

தூக்க நேர்ச்சை தொடங்கியதும் தூக்க வண்டியின் வில்களின் பின்பகுதியை கயிறால் கட்டி சிலர் கீழே இழுப்பார்கள். இதனால் முன்பகுதி சர்ரென மேலே போகிறது. அப்போது 4 தூக்கக்காரர்களும் குழந்தைகளுடன் 40 அடி உயரத்தில் மேலே தொங்குவார்கள். அப்போது சுற்றி நிற்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குலவையிட்டு பக்தி பரவசத்தோடு அம்மனை வழிபடுவார்கள். பின்னர் செண்டை மேளம் ஒலிக்க, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வடம் பிடித்து தூக்க வண்டியை கோவிலை சுற்றி இழுத்து வருவார்கள்.

அந்தரத்தில் குழந்தைகளுடன் தொங்கியபடியே அந்த 4 நபர்களும் கோவிலை ஒரு சுற்று சுற்றி முடிந்ததும் கீழே இறங்குவார்கள். பிறகு வேறு 4 நபர்களை தூக்க வண்டியில் கட்டி தொங்கவிட்டு அவர்களின் கைகளில் வேறு நான்கு குழந்தைகள் கொடுக்கப்படும். இப்படி அதிகாலையில் தொடங்கி இரவு வரை விடிய, விடிய தூக்க நேர்ச்சை நடைபெறும். இந்த காட்சியை காணும் பக்தர்களுக்கு மெய்சிலிர்க்கும். குழந்தைகளை அந்தரத்தில் தூக்கிச் சென்றபடி அம்மனை வழிபடுவதால் இந்த திருவிழாவுக்கு தூக்க நேர்ச்சை திருவிழா என்று பெயர்.

தூக்க காரர்கள் 4-ம் திருவிழா நாளில் இருந்தே விரதமிருக்க வேண்டும். கோவில் வளாகத்தில் தான் தங்க வேண்டும். அந்த 7 நாட்களும் கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு எளிமையான உணவு வழங்கப்படும்.

Tags:    

Similar News