வழிபாடு

கோரக்கர் சித்தர் தோன்றிய வரலாறு

Published On 2023-07-06 06:45 GMT   |   Update On 2023-07-06 06:45 GMT
  • சிவபெருமானாலேயே பெயர் சூட்டப்பட்ட சித்தர், மச்சேந்திர நாதர்.
  • கோரக்கர் வரலாறு விரிவானது

சிவபெருமானாலேயே பெயர் சூட்டப்பட்ட சித்தர், மச்சேந்திர நாதர். அந்த சித்தர் ஒரு வீட்டு வாசலில் நின்று, உணவு கேட்டார். உணவு கொண்டு வந்த பெண், சித்தரை வணங்கி, "சுவாமி! எனக்குப் பிள்ளைப்பேறு கிடைக்க வேண்டும். ஆசி கூறுங்கள்!" என வேண்டி, பிட்சை இட்டாள். "உன் ஆசை நிறைவேறும்" என்ற சித்தர், விபூதியை மந்திரித்துப் பிரசாதமாக அளித்தார். "இதைச் சாப்பிடம்மா! உனக்கு ஆண் குழந்தை பிறக்கும்" எனக்கூறிச் சென்றார்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரி, "இந்த மாதிரி ஆளுங்க, மயக்கி இழுத்துக்கிட்டுப் போயிடுவாங்க. பேசாம அந்த விபூதிய அடுப்புல போட்டுடு!" என்றாள். அதை நம்பிய பெண், சித்தர் மந்திரித்துத் தந்த விபூதியை அடுப்புச் சாம்பலுடன் கலந்து, கொல்லைப்பக்கம் குப்பை மேட்டில் கொட்டி விட்டாள்.

ஒன்பது வருடங்கள் ஆயின. சித்தர் மறுபடியும் வந்தார். தான் ஏற்கனவே விபூதி தந்த பெண் வீட்டிற்குப் சென்று, "பெண்ணே! எங்கே உன் மகன்? நான் அவனைப் பார்க்க வேண்டும்" என்றார்.

அவர் காலில் விழுந்து வணங்கிய பெண், "சுவாமி! மன்னியுங்கள்! பக்கத்து வீட்டுக்காரியின் பேச்சைக் கேட்டு, தாங்கள் தந்த விபூதிப் பிரசாதத்தைக் குப்பைமேட்டில் போட்டு விட்டேன்" என்றாள்.

"சரிம்மா! அந்தக் குப்பைமேடு எங்கே இருக்கிறது?" எனக் கேட்டார் சித்தர். அவரை அழைத்துப்போய் குப்பை மேட்டைக் காட்டினாள் அந்தப் பெண். அங்கு போன சித்தர், "கோரக்கா!" என்றார்.

"என்ன?" எனக்குரல் வந்தது, குப்பை மேட்டில் இருந்து. சித்தர் உத்தரவின் பேரில் குப்பை மேட்டை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றினார்கள். அங்கே குப்பை மேட்டின் அடியில், ஒன்பது வயதான ஆண் குழந்தை ஒன்று, தவம் செய்யும் நிலையில் இருந்தது.

அந்தக் குழந்தைதான், கோரக்கர். இந்தக் கோரக்கரால் உருவானது தான் `கோரக்கர் மூலிகை'. இதன் மகிமையை 'அருளைக் கலம்பகம்' எனும் பழைமையான தமிழ்நூல் கூறுகிறது. கோரக்கர் வரலாறு விரிவானது.

Tags:    

Similar News