சேலத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோட்டை பெருமாள் கோவில் தேரோட்டம்
- இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.
- 16-ந்தேதி வசந்த உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது.
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடத்தப்படும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக விழா நடத்தப்படவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக காலை 5.45 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கோவிலில் இருந்து ராஜகணபதி கோவில் முன்பு தேர் நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்திற்கு சாமியை ஊர்வலமாக மேளதாளத்துடன், பக்தர்கள் புடை சூழ எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேரில் எழுந்தருளினார்.
பின்னர் காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி உள்பட பக்தர்கள் பலர் தேரை வடம் பிடித்து இழுந்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடந்ததால் திரளான பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
ராஜகணபதி கோவிலில் தொடங்கிய இந்த தேரோட்டம் 2-வது அக்ரகாரம், பட்டைக்கோவில், கடை வீதி வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தையொட்டி கோவிலை சுற்றி பல இடங்களில் பக்தர்களுக்கு நீர், மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி உற்சவம், 15-ந்தேதி இரவு சத்தாபரணம், 16-ந்தேதி வசந்த உற்சவம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. ழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அமுதசுரபி தலைமையில் அதிகாரிகள் பலர் செய்திருந்தனர்.