வழிபாடு

கண்ணன் வரலாறு

Published On 2022-08-19 08:13 GMT   |   Update On 2022-08-19 08:13 GMT
  • எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார்.
  • பல இடங்களில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று உறியடித் திருவிழா நடத்தப்படும்.

எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார். அதன்படி அதர்மத்தை அழிக்க பகவான் பூலோகத்தில் பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவில் சிறைக்குள் வசுதேவர்-தேவகிக்கு மகனாக ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார்.

பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் ஸ்ரீ கிருஷ்ணர் காட்சி அளித்தார். பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சாதாரணக் குழந்தை வடிவானார். 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தா வனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் ஸ்ரீகிருஷ்ணரின் இளம் வயது கழிந்தது.

தன்னை வதம் செய்யவே கண்ணன் பிறந்திருக்கிறான் என்று எண்ணினான் கம்சன். அதனால் அவனை அழிக்க பல அரக்கர்களை அனுப்பினான். முதலில் வந்தவள் பூதனை என்ற அரக்கி. அவள் பால் தருவது போல் நடித்தாள். ஆனால் கண்ணனோ அவளிடம் பாலைக் குடிப்பது போல் குடித்து அவளைக் கொன்று விட்டார்.

அரக்கியை தொடர்ந்து அரக்கர்கள் பல்வேறு உருவங்களில் வந்தார்கள். பராசுரன் கொக்காகவும், தேனுகாசுரன் கழுதையாகவும், பிரலம்பன் சிறுவனாகவும், அரிஷ்டன் காளையாகவும், கேசி குதிரையாகவும் உருவம் எடுத்து கண்ணனைக்கொல்ல முயன்றனர். ஆனால் 5 வயதில் இருந்த கண்ணன் அவர்களை எல்லாம் துவம்சம் செய்து கொன்றார்.

இதுபோன்று கண்ணனுக்கு தொடர்ந்து இடையூறுகள் வந்தா லும், அவரது வளர்ப்பு பெற்றோரான நந்தகோபனும், யசோதையும் மற்றும் கோகுலவாசிகளும் பிருந்தாவனத்திற்கு இடம் பெயர்ந்தனர். அங்கும் காளிங்கமடுவில் காளிங்கன் என்ற அசுரன் இருந்துகொண்டு அட்டகாசம் செய்து வந்தான். கண்ணன் அவன் மீது ஏறி நின்று நர்த்தனம் ஆடி அவனை அடக்கினார். இந்திரனது சூழ்ச்சியினால் பெய்த அடை மழையில் இருந்து கோவர்த்தன மலையைக் குடையாக பிடித்து பசுக்களையும், அங்கு இருந்த மக்களையும் காப்பாற்றினார். கண்ணன் பிறந்தது விரஜபூமி என்ற வட மதுரா. வளர்ந்தது கோகுலம். வடமதுரா முக்தியளிக்கும் 7 நகரங்களுள் ஒன்று.

கண்ணன் என்றால் ராதை, ருக்மணி, பாமா இவர்கள்தான் நினைவுக்கு வருவர். ஆனால் கண்ணனுக்கு 8 மனைவிகள் உண்டு. ருக்மணி, சத்யபாமா, காளிந்தி, ஜாம்பவதி, விக்ரவிந்தை, சத்யவதி, பத்திரை, லட்சுமணை இப்படி 8 பேர் பட்ட மகரிஷிகள். ஒவ்வொரு மனைவிக்கும் தலா 10 குழந்தைகள் பிறந்தன.

கிருஷ்ணரின் பிள்ளைகளில் மிகவும் புகழ் பெற்றவர்கள் 18 பேர். அவர்கள் பிரத்யும்னன், அனுருத்தன், தீப்திமான், பானு சாம்பன், மது, பருஹத்பானு, சித்ரபானு, விருகன், அருணன், புஷ்கரன், வேதபாசு, ஸ்ருததேவன், சுருந்தனன், சித்திரபாகு, விருபன், கவிநியோக்தன். கம்சன், கண்ணனை அழிக்க பல அசுரர்களை அனுப்பினான். ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் கண்ணன் கொன்று குவித்தார்.

அதனால் கோபம் கொண்ட கம்சன், "நான் தனுர்யாகம் செய்யப்போகிறேன் அதற்கு வேண்டிய பொருட்களுடன் நந்தகோபரை குடும்பத்துடன் இங்கு வரச் சொல்லுங்கள்" என்று அமைச்சர் அக்ரூரரிடம் கூறினான். அமைச்சரும் அங்கு வந்தார். பலராமனும், கண்ணனும் கம்சனின் யாகசாலைக்குச்சென்றனர்.

வழியில் குவலயபீடம் என்னும் யானைக்கு மதம் பிடித்தது. அது துதிக்கையால் இரும்பு உலக்கையை தூக்கி, கண்ணனனையும், பலராமனையும் தாக்க முயன்றது. அப்போது யானையின் தந்தத்தை ஒடித்து யானையையும், பாகனையும் கொன்றார் கண்ணன்.

பின்னர் மல்யுத்த அரங்கிற்கு சென்றனர். அங்கு கண்ணனை அழிக்க சானூரன், முஷ்டிகன், கூடன், சலன் போன்ற மல்யுத்த வீரர்கள் காத்திருந்தனர். அவர்களுடன் மல்யுத்தம் செய்து அவர்களை அழித்தார். இதைக்கண்ட அனைவரும் கண்ணனைப் பாராட்டினர். ஆனால் கம்சனுக்கு மட்டும் கண்ணணை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.

ஊரில் உள்ள சிறுவர்களை எல்லாம் வெட்டி சாய்ந்து விட்டு, வசுதேவர், தேவகியைக் கொல்லுங்கள் என்று அவன் கூறினான். உடனே கண்ணன் அவன் மீது ஏறிக் குதித்து, அவனது தலையை பிடித்து தரையில் வேகமாக அடித்துக்கொன்றார். இத்துடன் கம்ச வதம் முடிந்தது.

கம்சனின் சிறையில் இருந்த தாய், தந்தை, பாட்டனார், உக்கிர சேனர் என்று அனைவரையும் விடுவித்து, கோகுலத்திற்கு அழைத்துச் சென்றார் கண்ணன்.

கம்ச வதத்திற்குப்பின்பு மக்கள் பயமின்றி வாழ்த்தனர். பல ராமனுக்கும், கிருஷ்ணருக்கும் சாந்தி பீவி என்ற முனிவர் ஆயக்கலைகள் அறுபத்துநான்கையும் கற்றுக்கொடுத்தார்.

அதற்கு குருதட்சணையாக, வெகுநாட்களுக்கு முன்பு கடலில் தவறி விழுந்த எனது மகனை உயிருடன் கொண்டு வந்து கொடுங்கள் என்றார். நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் எமனிடம் இருந்து குருவினுடைய மகனை மீட்டுக்கொடுத்தனர். துவாபரயுக முடிவில் கிருஷ்ணாவதாரம் நிறைவு பெற்றது. இதையெல்லாம் பிரதிபலிக்கும் வகையில் தற்போது கிருஷ்ண ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடுகளில் குதூகலம் நிறைந்திருக்க வாசல் முழுவதும் கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை செல்லும் பாதையில் சின்னச் சின்ன காலடிச் சுவடுகளை கோலமிட வேண்டும். ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் கிருஷ்ணனுக்கு பிடித்த வெண்ணை, அவல் மற்றும் பழங்கள், கார வகைகள் வைத்து பூஜை செய்ய வேண்டும். மாயக்கண்ணன் இளமையில் செய்த சேட்டைகளை நினைத்தாலே பரமானந்தத்தை தரும். அவற்றைப் போற்றும் வகையில், பல இடங்களில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று உறியடித் திருவிழா நடத்தப்படும்.

கண்ணன், முகுந்தன், கோபால கிருஷ்ணன், நந்த கோபாலன் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் குழந்தை கிருஷ்ணனை, கோகுலாஷ்டமி தினத்தன்று நாமும் நம் வீடுகளில் வரவேற்று பூஜை செய்து ஆனந்தம் அடைவோம்.

Tags:    

Similar News