அதங்கோடு கிருஷ்ணசாமி கோவிலில் கொடிமரம் அமைக்க ஏற்பாடு
- திருவிழா காலங்களில் தற்காலிக கொடிமரம் நாட்டி கொடியேற்றத்துடன் திருவிழா நடைபெறும்.
- கோவிலில் நிரந்தர கொடி மரம் அமைக்க கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது.
அதங்கோடு மாயா கிருஷ்ணசாமி கோவிலில் நிரந்தர கொடி மரம் அமைக்க கேரள மாநிலத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட பிரமாண்ட தேக்கு மரத்திற்கு, ஊர்மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அதங்கோடு மாயா கிருஷ்ணசாமி கோவிலில் திருவிழா காலங்களில் தற்காலிக கொடிமரம் நாட்டி கொடியேற்றத்துடன் திருவிழா நடைபெறும். இந்த நிலையில் கோவிலில் நிரந்தர கொடி மரம் அமைக்க கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது.
அதன் படி கோவிலின் தந்திரியும், சபரிமலை கோவில் முன்னாள் தந்திரியுமான தெக்கேடத்து மனை நாராயணன் விஷ்ணு நம்பூதிரி வழிகாட்டுதலின் படி, கோவில் நிர்வாகிகள் கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் மான்னானம் என்ற பகுதியில் இருந்து 45 அடி நீளம் கொண்ட தேக்கு மரத்தை தேர்வு செய்து, அங்குள்ள நரசிம்ம மூர்த்தி கோவிலில் பூஜைகள் செய்து லாரி மூலம் குமரி மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த கொடி மரத்துக்கு களியக்காவிளை பகுதியில் இருந்து பக்தர்கள் வரவேற்பு அளித்து ஊர்வலமாக கிருஷ்ணசாமி கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆலய நிர்வாக தலைவர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.