'குடந்தை கிடந்தான்' என அழைக்கப்படும் சாரங்கபாணி பெருமாள்
- மிக பழமை வாய்ந்தது சாரங்கபாணி கோவிலாகும்.
- ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும்.
கும்பகோணத்தில் உள்ள வைணவக்கோவில்களில் மிக பழமை வாய்ந்தது சாரங்கபாணி கோவிலாகும். இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும். இக்கோவிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டிருப்பதாகும். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.
தஞ்சை நாயக்க மன்னர்களால் இக்கோவில் கலைநயம் மிகுந்த சிற்பங்கள், தூண்கள் கொண்ட மண்டபங்கள், ராஜ கோபுரங்களால் கட்டப்பட்டவையாகும். இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. சோழ நாட்டு பனிரெண்டாவது திருத்தலம் ஆகும்.
இக்கோவில் நாலாயிரத்திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக்கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமாளை குடந்தை கிடந்தான் என்று அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார். திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.
இக்கோவிலில் நடைபெறும் சித்திரை தேர்த்திருவிழா சிறப்புடையது. இதற்காக இந்தக்கோவிலின் பெரிய தேர் சித்திரை தேர் என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கோவில் தேர்களில் இது மூன்றாவது பெரிய தேராகும்.
இது திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கும் இணையாக புகழ் பெற்றதாகும். இப்பெரிய மரத்தேரின் எடை 500 டன் ஆகும். இத்தேரின் அடிப்பாகம் 25 அடியாகவும், மேல்தட்டு 35 அடியாகவும், உயரம் 30 அடியாகவும் உள்ளது. இத்தேர் அலங்கரிக்கப்படும் போது 110 அடியாக இருக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த சித்திரை தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) நடந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு தேரோட்டத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்பு துறையினர் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.