வழிபாடு

கொடியேற்றப்பட்டு இருப்பதையும், சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகநாதபெருமான் அருள்பாலிப்பதையும் காணலாம்.

குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவில் தேரோட்டம் 3-ந்தேதி நடக்கிறது

Published On 2023-03-28 04:38 GMT   |   Update On 2023-03-28 04:38 GMT
  • 30-ந்தேதி வள்ளி நாயகி திருமணம் நடக்கிறது.
  • 1-ந்தேதி தங்க ரதத்தில் வீதி உலா நடக்கிறது.

காரைக்குடி அருகே உள்ளது குன்றக்குடி. இங்கு புகழ் பெற்ற சண்முகநாதபெருமான் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான இந்த விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு வெள்ளிக்கேடயத்தில் சண்முகநாதபெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

வருகிற 30-ந்தேதி வள்ளி நாயகி திருமணம் நிகழ்ச்சியும், 1-ந்தேதி தங்க ரதத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. 2-ந்தேதி இரவு 8 மணிக்கு தெப்பம் மற்றும் வெள்ளி ரதம் நிகழ்ச்சி நடக்கிறது.

வருகிற 3-ந்தேதி காலையில் தேரில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை தேரோட்ட நிகழ்ச்சியும், இரவு திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. 4-ந்தேதி பங்குனி உத்திர விழாவையொட்டி காலை உத்திரம் தீர்த்த விழாவும், பக்தர்கள் காவடி, அக்னி காவடி, அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், இரவு மயிலாடும்பாறையில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News