வழிபாடு

லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் ஆடித்தபசு உருவான கதை

Published On 2024-07-18 03:03 GMT   |   Update On 2024-07-18 03:03 GMT
  • கல்யாண வரம் கிடைக்கும், சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.
  • ஆடித் தபசு மண்டபத்தில் கோமதியம்மன் எழுந்தருள்வாள்.

ஒருமுறை 'சிவன் பெரியவரா?... விஷ்ணு பெரியவரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த சக்திகள் இரண்டும் ஒன்றே என்பதை உலக மக்களுக்கு உணர்த்த வேண்டும்' என்று எண்ணினாள் அம்பிகை.

தனது எண்ணத்தை சிவபெருமானிடம் கூறி, 'சுவாமி... சங்கரரும் நாராயணரும் பேதம் இல்லாமல் பொருந்தி இருக்கும் திருக்காட்சியைக் காட்டியருள வேண்டும்' என வேண்டினாள். உடனே சிவபெருமான், 'தேவி உனது எண்ணம் நிறைவேறும்.

பூலோகத்தில் அகத்திய முனிவன் இருக்கும் பொதிகை மலையின் அருகில் உள்ள புன்னை வனத்தலத்துக்கு (சங்கரன்கோவில்) சென்று தவமியற்று. அங்கு நீ விரும்பியபடியே, யாம் சங்கர நாராயணராக காட்சி கொடுப்போம். மகாசக்தியான நீயும் அங்கே இடம் பெற வேண்டும்' என்றார்.

அதன்படியே பூலோகத்தில் உள்ள புன்னை வனத்தலத்தை அடைந்தாள் அம்பிகை. அங்கே, முனிவர்கள் - புன்னை மரங்களாகி நிழல்தர, அந்த நிழலில் பெரும் தவத்தை மேற்கொண்டாள் அம்பிகை.

தேவ மாதர்கள் பசுக் கூட்டமாக தோன்றி அன்னையின் தவத்துக்கு உதவினர். அதனால் மகிழ்ந்த அம்பிகை, அந்த பசுக்களின் பெருமையை உலகுக்கு உணர்த்த, 'ஆவுடையாள்' எனும் திருநாமம் கொண்டாள் (ஆ-பசு). மேலும், 'கோ'(பசு)க்களின் பெயரை இணைத்து 'கோமதி' எனும் மற்றொரு திருநாமத்தையும் ஏற்றாள். அம்பிகையின் தவத்தால் அங்கே ஆவினங்களும் பெருமை பெற்றன.

எந்த திருக்காட்சியைக் காண அங்கே அன்னை தவம் செய்தாலோ, அந்த காட்சியைக் காணும் பாக்கியத்தை இரு பாம்புகளுக்கும் அளித்து அருள் புரிந்தாள் அம்பிகை. சங்கன், பதுமன் என்று இரு சர்ப்பங்கள், சங்கன் - சிவபக்தன். பதுமன் - விஷ்ணு பக்தன். இவர்களுக்கிடையே பெரும் போட்டி.

'சிவன் தான் பெரியவர்' என்று சங்கன் சொல்ல, 'இல்லை, விஷ்ணுவே பெரியவர்' என்று பதுமன் கூற, இருவருக்கும் இடையே சண்டை மூண்டது.

இருவரும் முனிவர்கள் பலரை சந்தித்து தங்களுக்கு ஆதரவு தேடினார்கள். அப்போது குருபகவான், 'அறியாமை கடலில் மூழ்கிக் கிடக்கும் உங்களுக்கு, ஞான விளக்கம் கிடைக்க வேண்டுமெனில், நீங்கள் புன்னை வனம் செல்லுங்கள். அங்கு உங்களது கேள்விக்கு பதில் கிடைக்கும்' என்றார்.

அதன்படி இருவரும் அருள் செழிக்கும் புன்னை வனம் வந்து தவமியற்றினர். அவர்களின் தவம் சங்கரரையும் நாராயணரையும் மகிழச் செய்தது. வீண்வாதம் செய்யும் அவர்களுக்காக மட்டுமல்லாமல், உலகிலுள்ள மற்றவர்களுக்கும் உண்மையை உணர்த்த, பாதித்திருமேனி சங்கரர், பாதி திருமேனி நாராயணராக கோலம் கொண்டு சங்கரநாராயணராகத் திருக்காட்சி கொடுத்தனர்.

அம்பிகைக்கு இறைவன் சங்கரநாராயணராக காட்சி தந்த வைபவமே இங்கே ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த திருவிழாவில் உத்திராட நட்சத்திரத்தன்று, ஆடித் தபசு மண்டபத்தில் கோமதியம்மன் எழுந்தருள்வாள்.

அன்று மாலை ஸ்ரீ சங்கரநாராயணர் திருக்காட்சி வைபவம் நடைபெறும். ஆடித்தபசு திருவிழாவில் கலந்து கொண்டு தரிசித்தால் கல்யாண வரம் கிடைக்கும், சர்ப்ப தோஷங்கள் நீங்கும், வாழ்வில் தடைகள்யாவும் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் என்பது பக்தர்களது நம்பிக்கை.

Tags:    

Similar News