வழிபாடு
null

பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் லலிதா சகஸ்ரநாமம்.... இனி தினமும் கேளுங்க!

Published On 2024-09-17 02:45 GMT   |   Update On 2024-09-17 08:02 GMT
  • அம்பிகை வழிபாட்டில் திரிபுரசுந்தரி முக்கியமான தெய்வமாக கருதப்படுகிறாள்.
  • ஒரே பெயரை மீண்டும் சொல்லாத, ஒரே சகஸ்ரநாமம்.

சக்தி என்னும் அம்பிகையின் வழிபாட்டில் 'திரிபுரசுந்தரி' முக்கியமான தெய்வமாக கருதப்படுகிறாள். ஒரு முறை சிவபெருமானின் நெற்றிக்கண் பார்வையால் காமன் (மன்மதன்) எரிந்து சாம்பலானான்.

அவனது சாம்பலில் இருந்து பண்டன் என்ற அரக்கன் தோன்றி, சோணிதபுரம் என்ற இடத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். அவனால் தேவர்கள் அனைவரும் துன்பத்திற்கு உள்ளாகினர்.

இதையடுத்து தேவர்கள் அனைவரும் சிதக்னி குண்டம் அமைத்து, சிவபெருமானையும், பார்வதிதேவியையும் வேண்டினர். அவர்களின் வேண்டுதலால், குண்டத்தில் இருந்து காமேசுவரனாக சிவனும், திரிபுரசுந்தரியாக பார்வதியும் தோன்றினர்.

மன்மதனின் கரும்பு வில்லும், மலர்பாணமும் தாங்கியிருந்த தேவி, தனது சேனைகளுடன் சென்று, பண்டனையும் அவனது படைகளையும் அழித்தாள்.

திரிபுரசுந்தரியை 'லலிதை', 'ராஜ ராஜேஸ்வரி' என்ற பெயர்களிலும் அழைப்பார்கள். 'திரிபுரசுந்தரி' என்பதற்கு 'மூவுலகிலும் பேரழகி' என்றும், 'லலிதா' என்பதற்கு 'திருவிளையாடல்கள் புரிபவள்' என்றும், 'ராஜராஜேஸ்வரி' என்பதற்கு 'அரசர்க்கெல்லாம் அரசி' என்றும் பொருள்.

தன்னை வழிபடுபவர்களுக்கு 16 பேறுகளையும் வழங்கும் இந்த தேவியானவள், 16 வயதுடைய இளம் மங்கை என்பதால் இவளை 'சோடசி' என்றும் அழைப்பர்.

குறிப்பாக பக்தர்கள் பலரும் இந்த தேவியை 'லலிதா திரிபுரசுந்தரி' என்றே அழைக்கின்றனர்.

மகா காமேசுவரனாகிய சிவபெருமான் சிம்மாசனமாக வீற்றிருக்க, பிரம்மன், திருமால், ருத்திரன், மகேசுவரன் ஆகியோர் அதன் கால்களாக இருக்க, அந்த சிம்மாசனத்தின் மீது வலது காலை மடித்தும், இடது காலை தொடங்க விட்டும் அமர்ந்த நிலையில் லலிதா திரிபுரசுந்தரி காட்சி தருகிறாள்.

நான்கு கரங்களைக் கொண்ட இந்த தேவியின் கரங்களில் பாசம், அங்குசம், கரும்பு வில், ஐம்மலர் அம்புகள் உள்ளன. அன்னையின் இருபுறமும் சரஸ்வதியும், லட்சுமியும் சாமரம் வீசுகின்றனர்.

இந்த தேவியை வழிபடுவதற்கான துதிப்பாடல்களில், ஆயிரம் நாமங்கள் கொண்ட 'லலிதா சகஸ்ரநாமம்' முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

லலிதாதேவியின் கட்டளையின் பேரில், வாசினி, காமேஸ்வரி, அருணா, விமலா, ஜெயனி, மோதினி, சர்வேஸ்வரி, கவுலினி ஆகிய எட்டு தேவிகள், இந்த லலிதா சகஸ்ரநாமத்தை இயற்றியதாக சொல்லப்படுகிறது.

18 புராணங்களில் ஒன்றான பிரமாண்ட புராணத்தில் இந்த லலிதா சகஸ்ரநாமம் இடம்பெற்றுள்ளது. அந்த புராணத்தில் லலிதோபாக்கியானம் என்ற இடத்தில் ஹயக்ரீவப் பெருமாள், அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமத்தை உபதேசம் செய்துள்ளார். இது உபதேசிக்கப்பட்ட இடமாக, காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த லலிதா சகஸ்ரநாமம், துதிப்பாடல் மற்றும் ஸ்தோத்திரங்களாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. எனவே இதனை ஸ்தோத்திர வடிவிலோ அல்லது நாமாவளி வடிவத்திலோ உச்சரிக்கலாம்.

ஒரே பெயரை மீண்டும் சொல்லாத, ஒரே சகஸ்ரநாமம், 'லலிதா சகஸ்ரநாமம்' என்கிறார்கள். சக்தியின் வெளிப்பாடாக கருதப்படும் லலிதா தேவியை வழிபடுபவர்களுக்கு, லலிதா சகஸ்ரநாமம் ஒரு புனித நூலாகும்.

லலிதா திரிபுரசுந்தரியின் ஆயிரம் பெயர்களையும், தினந்தோறும் சொல்லி அந்த தேவியை வழிபடும்போது, அவளது அடியார்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், லலிதா திரிபுரசுந்தரியின் முக்கியமான ஆலயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இது தவிர திரிபுராவில் உள்ள ராதாகிஷோர்பூர், மத்திய பிரதேசத்தின் காரியா ஆகிய இடங்களிலும் லலிதா தேவிக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன.

Tags:    

Similar News