புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-30)
- பெருநாள் பரிசு வழங்கப்படும் இரவு.
- நீங்கள் இறைவனிடம் சொர்க்கத்தை கேட்பது.
பெருநாள் பரிசு வழங்கப்படும் இரவு
ரமலான் பிறை முதல் நோன்புப் பெருநாள் முழுவதும் இறைவனுக்காக உண்ணாமலும், பருகாமலும் இருந்து, இரவில் உறங்காமலும் இருந்து இறைவணக்கம் புரிந்து வந்தனர். மக்களிடம் ஈவு, இரக்கம் காட்டி வந்தனர். இல்லாதோருக்கு ஈகை (மனம் உவந்து வழங்கப்படும் கொடை, உதவி) அளித்து வந்தனர். எல்லோரிடமும் இணங்கி, நெருங்கி வாழ்ந்தனர். எங்கும் பொறுமை, எதிலும் பொறுமையை நிறைவாக கடைப்பிடித்து வந்தனர்.
ஒரு மாத ரமலான் காலம் முழுவதும் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமையையும், மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமையையும் தொய்வில்லாமல் தொடராகச் செய்த நோன்பாளிகளுக்கு நோன்பின் பரிசு பெருநாளின் பிறை கண்ட ஷவ்வால் மாத முதல் இரவு (பெரு நாள் இரவு) அன்று வழங்கப்படுகிறது.
இஸ்லாமியப் பார்வையில் இஸ்லாமிய ஆண்டுக் கணக்கு, மாதக் கணக்கு யாவும் சந்திரனை மையமாக வைத்து தீர்மானிக்கப்படுகிறது. ஆகையால், இஸ்லாமிய மாதக்கணக்கு முதல் பிறை தென்பட்டதில் இருந்து துவங்கி விடுகிறது. முதல் பிறைதான் இஸ்லாமிய மாதத்தின் முதல் இரவாகும். இதன் அடிப்படையில் இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் இரவு முந்தி வருகிறது. பகல் பிந்தி வருகிறது.
ஒரு பிறையில் இருந்து அடுத்த பிறை வரைக்கும் ஒரு நாள் ஆகும். இதே பாணியில் பெருநாள் பிறை பார்க்கப்பட்ட அன்றைய இரவுதான் பெருநாள் இரவாகும். மறுநாள் வருவது பெருநாள் பகலாகும். பெருநாள் பகலுடன் ஒருநாள் நிறைவு அடைந்துவிட்டது. மீதி அடுத்த நாளின் இரவு துவங்கி விடுகிறது.
பெருநாள் இரவு அன்று நோன்பாளிகள் இறைவனிடம் தங்களுக்கு நோன்பு பரிசாக சொர்க்கத்தை கேட்க வேண்டும். மேலும், நரகத்தில் இருந்து பாதுகாப்புத்தேட வேண்டும். இந்த இரண்டும் நோன்பாளிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும் .
நீங்கள் தேவையற்றிருக்க முடியாத இரண்டு விசயங்கள் உள்ளன.
1) நீங்கள் இறைவனிடம் சொர்க்கத்தை கேட்பது.
2) நீங்கள் இறைவனிடம் நரகத்தை விட்டும் பாதுகாப்புத் தேடுவது ஆகும். இதை ரமலானில் அதிகமாகச் செய்து வாருங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: ஸல் மான் பார்ஸீ (ரலி), நூல்: தர்வீப்)
பிரார்த்தனை ஏற்கப்படும் ஐந்து இரவுகள்:
1) வெள்ளிக்கிழமை இரவு
2) நோன்புப் பெருநாள் இரவு
3) ஹஜ்ஜூப் பெருநாள் இரவு
4) ரஜப் மாத முதல் இரவு
5) ஷஅபான் மாத பாதி இரவு
இறைவணக்கம் புரிய சிறந்த ஐந்து இரவுகள்:
1) துல்ஹஜ் மாதம் 8-ம் நாள் இரவு
2) துல்ஹஜ் மாதம் ஒன்பதாவது தினமான அரபா நாள் இரவு
3) ஹஜ்ஜூப் பெருநாள் இரவு
4) நோன்புப் பெருநாள் இரவு
5) ஷஅ பான் மாத 15-ம் நாள் இரவு ஆகிய ஐந்து இரவுகளாகும்.
இந்த இரவுகளில் இறைவணக்கம் புரியலாம். இறைவனை துதிக்கலாம். இறைவனை நினைக்கலாம். இறைவனை பெருமைப்படுத்தலாம். இறைவனிடம் பாவமன்னிப்பு வேண்டலாம். இறைவனிடம் பிரார்த்தனை செய்யலாம்.
இந்த இரவுகளுக்கென்று சிறப்புத் தொழுகைகளோ, சிறப்பு பிரார்த்தனைகளோ எதுவுமே கிடையாது. இந்த இரவுகளை உயிர்ப்பிக்க எளிய வழி ஒன்று உள்ளது. அது வளமையான வணக்க வழிபாட்டு முறையாகும். அதுயாதெனில், அன்றைய இரவுகளில் இஷா எனும் இரவுத் தொழுகையையும், பஜ்ர் எனும் அதிகாலைத் தொழுகையையும் இமாமுடன், ஜமாத்துடன் இணைந்து நிறைவேற்றினால் போதும். அன்றைய இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை கிடைத்துவிடுகிறது.