மகாமாரியம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்
- சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மகாமாரியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சீர்காழி தென்பாதி மெயின் ரோட்டில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் இரவு அம்மன் கோவிலில் உட்புற வீதிஉலா நடைபெற்றது. தொடர்ந்து தீமிதி திருவிழாவை முன்னிட்டு உப்பனாற்று கரையிலிருந்து பால்குடம், பால்காவடி, அலகு காவடி, பறவை காவடி புறப்பாடு நடந்தது. முன்னதாக இந்த ஊர்வலம் மேல தாளங்கள் முழங்க, வாண வேடிக்கையோடு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.
பின்னர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் இரவு, கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவு அம்மன் வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
இதேபோல மயிலாடுதுறை மாவட்டம் மறையூர் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கரகம், காவடி, பால்குடம் தீமிதி திருவிழா கடந்த 2-ம் தேதி பந்தல்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் அபிஷேக ஆராதனைகள், செல்லியம்மன் கும்ப பூஜை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம், தீமிதி திருவிழா நடந்தது.
முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் மறையூர் அகஸ்தீஸ்வரர் கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வாண்வேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க கரகம், கூண்டு காவடி, அலகு காவடி, பால்குடம் எடுத்து கோவிலை வந்தடைந்தனர்.பின்னர் கோவிலின் அருகில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மகாமாரியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மறையூர் கிராமவாசிகள், குலதெய்வத்தார்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் இரவு அம்பாள் வீதி உலா காட்சியும் நடைபெற்றது.