மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா: ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம்
- ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.
- வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
ஸ்ரீகாளஹஸ்தி:
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.
முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள தங்கக் கொடிமரம் அருகில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேதசுப்பிரமணியசாமி, கங்காபவானி சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார், பக்தகண்ணப்பர், சண்டிகேஸ்வரரை மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சன்னதி அருகில் வைத்தனர்.
வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள் கலச ஸ்தாபனம், சிறப்புப்பூஜை, ஹோமப் பூஜை செய்தனர். வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களைமுழங்க கலசங்களில் உள்ள புனித கங்கை நீரால் தங்கக் கொடி மரத்துக்கு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பித்தனர்.
அதன் பிறகு மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் வேத மந்திரங்கள், சிவ நாமங்கள் முழங்க பக்தர்கள் வழங்கிய சேலைகள், வெள்ளைநிற பிரம்மோற்சவ விழா கொடியை கம்பத்தில் ஏற்றினர்.
அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் `ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா' எனப் பக்தி கோஷம் எழுப்பினர். அப்போது அர்ச்சகர்கள் கொடிக்கம்பத்துக்கு தீப தூப நெய்வேத்தியம் சமர்ப்பித்தனர்.