வழிபாடு

ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கங்காதேவியுடன் ஹம்ச வாகனத்திலும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் யாளி வாகனத்திலும் அருள்பாலித்த காட்சி.

பிரம்மோற்சவ விழா: ஹம்ச, யாளி வாகனங்களில் சிவன்-அம்பாள் வீதிஉலா

Published On 2023-02-17 03:52 GMT   |   Update On 2023-02-17 03:52 GMT
  • உற்சவர்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
  • பக்தர்கள் ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா.. என விண்ணதிர பக்தி கோஷம் எழுப்பினர்.

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை ஹம்ச, யாளி வாகன வீதிஉலா நடந்தது.

முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவர்களான சாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க உற்சவர்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டனர். ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கங்காதேவியுடன் ஹம்ச வாகனத்திலும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் யாளி வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். உற்சவர்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கோவிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவர்கள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்போது பக்தர்கள் ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா.. என விண்ணதிர பக்தி கோஷம் எழுப்பினர்.

வீதிஉலாவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, நிர்வாக அதிகாரி சாகர்பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து இரவு ராவணாசூர வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு சேஷ வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருள்கிறார்கள்.

Tags:    

Similar News