வழிபாடு

சிவராத்திரி கதை-1

Published On 2023-02-17 08:41 GMT   |   Update On 2023-02-17 08:41 GMT
  • நமசிவாய மந்திரம் உச்சரித்தாலே மனம் இரங்கி அருள்புரியும் ஆபத்பாந்தவனல்லவா அந்த ஈசன்.
  • தேவர்களை காப்பதற்காக அந்த விஷத்தை சாப்பிட்டார் ஈசன்.

ஒரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்துகொண்டே இருந்தது. தேவர்கள் எல்லோரும் அசுரர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் பிரம்மனிடம் சென்று வழி கேட்டனர். பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்து சாப்பிட்டால் இறப்பில்லாத இளமையான வாழ்வை பெறலாம். பின்னர் அசுரர்களை சமாளிப்பது ரொம்ப சுலபம் என்று பிரம்மா வழி சொன்னார்.

திருமாலிடம் அனுமதி வாங்கி விட்டு மந்திரமலையை மத்தாக்கினார்கள். சந்திரனை அசைத்தூணாக்கி வாசுகி என்ற பாம்பை கயிறாக அந்த மலையில் கட்டி தேவர்கள் ஒருபக்கமும், அசுரர்கள் ஒரு பக்கமும் இழுக்க தொடங்கினார்கள்.

மலை ஒருபக்கமாக சரியத் தொடங்கியதால் திருமால் ஆமை வடிவம் எடுத்து அந்த மலை விழுந்துவிடாமல் தாங்கினார். அமுதம் உண்ணப் போகிறோம் என்கிற சந்தோஷத்தில் தேவர்கள் வேகவேகமாக கடைந்தார்கள்.

வாசுகி களைத்து துடித்தது. அதன் உடல் இறுக்கமாக இருந்ததால் உடலில் இருந்த விஷத்தை கக்கியது. அதோடு பாற்கடலில் இருந்தும் நிறைய விஷம் வெளிப்பட்டது. இரண்டும் சேர்ந்து ஆலகால விஷம் எனும் கொடிய நஞ்சாக மாறிவிட்டது. விஷத்தின் வீரியம் தாங்க முடியாமல் அவர்கள் சிவனிடம் போய் முறையிட்டார்கள். நமசிவாய மந்திரம் உச்சரித்தாலே மனம் இரங்கி அருள்புரியும் ஆபத்பாந்தவனல்லவா அந்த ஈசன்.

தேவர்களை காப்பதாக உறுதியளித்தான். சுந்தரரை விஷத்தை கொண்டு வரும்படி பணித்தான். சுந்தரர் சென்று அவ்வளவு விஷத்தையும் உருட்டி உருண்டையாக நாவல்கனி போல் ஆக்கிக்கொண்டு வந்து சிவனிடம் கொடுத்தார். தேவர்களை காப்பதற்காக அந்த விஷத்தை சாப்பிட்டார் ஈசன். அன்னை சக்தி பதறிப்போனாள்.

உலக ரட்சகனான தன் கணவனின் உடலுக்குள் விஷம் சென்றால் அனைத்து உயிர்களும் அழிந்து விடுமே என்று கண்டத்தில் கைவைத்தாள் அன்னை. விஷம் அன்னையின் கைபட்டு கழுத்து பகுதியில் அப்படியே நின்றது. ஈசன் திருநீலகண்டன் ஆனார்.

அவரது உடலில் இருக்கும் விஷத்தின் உஷ்ணம் குறைவதற்காக பிரம்மா, திருமால், முப்பத்து முக்கோடி தேவர்கள், இந்திரன், முனிவர்கள், ரிஷிகள், அசுரர்கள் இவர்களுடன் பார்வதி தேவியும் சிவனை நினைத்து ஆறுகால பூஜை செய்து வழிபட்ட தினம் தான் சிவராத்திரி.

அப்படி சிவபெருமான் அனைத்து உயிர்களையும் காப்பதற்காக ஆலகால விஷத்தை அமுது போல் எண்ணி அருந்தியதை நமக்கு இன்றும் நினைவுபடுத்திக் கொண்டிருப்பது தான் சிவராத்திரி.

Tags:    

Similar News