- மகாலட்சுமி நம் இல்லம் தேடி வருவதாக நம்பிக்கை.
- சுமங்கலிப் பெண் வேடத்தில் வீடு வீடாக வருவாள்.
ஒரு சமயம் மகாலட்சுமி எங்கு வாசம் செய்யலாம் என்பதை தேர்வு செய்வதற்காக வயதான சுமங்கலிப் பெண் வேடத்தில் வீடு வீடாக வந்தாள்.
முதலில் அவள் சென்ற வீட்டில் பொழுது விடிந்த பிறகும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அதனால், அடுத்த வீட்டிற்கு சென்றாள். அந்த வீட்டில் சுத்தமே இல்லாமல் எங்கும் குப்பையாக இருந்தது. அதனால் மூன்றாவது வீட்டை தேடிச் சென்றாள் மகாலட்சுமி.
அந்த வீட்டில் கணவனும், மனைவியும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். மனைவி தலைவிரி கோலத்தில் இருந்தாள். அதனால் நான்காவது வீட்டைத்தேடி நகர்ந்தாள். அந்த வீட்டின் வாசலில் அழகான கோலம் போடப்பட்டிருந்தது. பூஜையறையில் இல்லத்தரசியானவள் பக்தியுடன் பாடிக்கொண்டிருந்தாள்.
அந்த வீடு மங்களகரமாக காட்சியளித்தது. வாசலில் வயதான பெண் வேடத்தில் தேவி நிற்பதை கண்ட அந்த இல்லத்தரசி அங்கு வேகமாக வந்தாள். தேவியை வரவேற்று உபசரித்தாள். தேவிக்கு உண்பதற்கு பால் எடுத்து வர சமையலறைக்குள் சென்றாள். பாலுடன் திரும்பி வந்து பார்த்தபோது தேவி இல்லை. வீட்டிற்கு வந்த அம்மா எங்கே என்று அந்த இல்லத்தரசி தேடினாள். ஆனால் காணவில்லை.
இதையடுத்து தனது பூஜையை தொடர பூஜையறைக்குள் சென்றாள். அங்கு அறை முழுவதும் செல்வம் கொட்டிக்கிடந்தது. வயதான சுமங்கலிப் பெண் உருவில் தன் வீட்டுக்கு வந்தது செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமிதான் என்பதை அறிந்த இல்லத்தரசி மகிழ்ந்தாள். எனவே வரலட்சுமி விரதம் அன்று மகாலட்சுமி நம் இல்லம் தேடி வருவதாக நம்பிக்கை.