வழிபாடு

பித்ரு சாபம் நீக்கும் மகாளய பட்சம் 30-9-2023 மகாளயம் ஆரம்பம்

Published On 2023-09-26 05:09 GMT   |   Update On 2023-09-26 05:09 GMT
  • ஒவ்வொரு ஆண்டும் திதி கொடுப்பது அவசியம்.
  • ஓராண்டுக்கு திதி கொடுத்த புண்ணியம் கிடைக்கும்.

முன்னோர்கள் இறந்த மாதம், பட்சம், திதி அறிந்து, ஒவ்வொரு ஆண்டும் திதி கொடுப்பது அவசியம். இல்லாவிட்டால் குடும்பத்தில் சிரமம், பிரச்சினை, துயர சம்பவங்கள் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. முன்னோர் வழிபாட்டை முறையாக மேற்கொண்டால், இந்தப் பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபடலாம்.

சிலருக்கு தங்களுடைய முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் இருக்கலாம். அவர்களும் மகாளய பட்சத்தில் திதி கொடுக்கலாம். மகாளய பட்சத்தில் கொடுக்கப்படும் தர்ப்பணத்தால், ஓராண்டுக்கு திதி கொடுத்த புண்ணியம் கிடைக்கும். மற்ற மாதங்களில் அமாவாசை தர்ப்பணம் செய்யாதவர்கள் கூட இந்த மகாளய பட்ச தர்ப்பணத்தை தவிர்க்காமல் செய்ய வேண்டும்.

ஒரு முறை சத்தியலோகத்தில் உள்ள பிரம்மனை, சில தேவர்கள் சென்று தரிசித் தனர். அப்போது அவர்களிடம், "நீங்கள் என்னை பூஜை செய்யுங்கள்" என்றார். ஆனால் அந்த வார்த்தையை சரியாக புரிந்து கொள்ளாத தேவர்கள், தங்களைத் தாங்களே பூஜித்துக் கொண்டனர். இதைக் கண்ட பிரம்மா "ஏ மூடர்களே! நீங்கள் அறிவற்றவர்களாக போவீர்கள்" என்று சபித்தார். தங்கள் தவறை உணர்ந்து வருந்திய தேவர்கள், சாப விமோசனம் கேட்டனர். அதற்கு பிரம்மதேவன், "நீங்கள் என் மகன்களிடம் சென்று சாப விமோசனம் பெற்றுக் கொள்ளுங்கள்" என்றார்.

தேவர்கள் பிரம்மபுத்திரர்களிடம் சென்று வணங்க, அவர்கள் தேவர்களைப் பார்த்து, "புத்திரர்களே.." என அழைத்தனர். பின், "உங்கள் சாபம் விலகிவிட்டது. உங்கள் விருப்பம் போல் நீங்கள் சந்தோஷமாக செல்லுங்கள்" என்றனர். இதனைப் பார்த்த பிரம்மதேவன், "என் மகன்கள் உங்களை புத்திரர்களே என்று அழைத்தனர். நீங்கள்அவர்களை வணங்கி சாப விமோசனம் பெற்றீர்கள். இன்று முதல் என் புத்திரர்கள் 'பித்ருக்கள்' (பித்ரு தேவதைகள்) என்று அழைக்கப்படுவார்கள். யார் இவர்களை பூஜிக்கின்றனரோ, அவர்களுக்கு பித்ரு தோஷம் விலகும்" என்றார். கவ்யவாகன், அனலன், சோமன், யாமன், அரியமான், அக்னிஷ்வார்தன், பர்ஹிஷதன் ஆகிய ஏழு பேரும் பித்ரு தேவர்களாக இருக்கிறார்கள்.

பித்ரு தோஷம், பித்ரு சாபம் என்பது, ஒருவருக்கு அவருடைய முன்னோர்களால் வருவதாக சிலர் சொல்வார்கள். ஒரு மகன் தன்னுடைய தாய்- தந்தையை உயிருடன் இருக்கும் பொழுது கவனிக்காவிட்டால் கூட, பசியால் வாடியபோதும், துன்பத்தை அனுபவித்த போதும், அந்த தாயும் தந்தையும் தன்னுடைய பிள்ளையை சபிக்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் இறந்த பிறகு சாபம் இடுவார்களா என்ன? பித்ரு தோஷம் (சாபம்) என்பது, நம் தாய், தந்தை, தாத்தா, பாட்டியால் வருவது அல்ல. அவர்களை சரியாக பராமரிக்காவிட்டால், பித்ரு தேவதைகள் நமக்குக் கொடுக்கக் கூடிய சாபம்தான், 'பித்ரு சாபம்' ஆகும்.

உயிருடன் இருக்கும் பொழுது தாய், தந்தையை பராமரிக்காத மகன், அவர்கள் இறந்த பிறகு வெகு சிறப்பாக சிரார்த்தம் செய்தாலும், அது காக்கை தின்னும் மலத்திற்கே சமம். இதை நன்கு மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மகனால் கைவிடப்பட்ட தாய்-தந்தையரை, மகள் பராமரிக்கும் பட்சத்தில், அவர்கள் இறந்த பிறகு சிரார்த் தம் செய்த புண்ணியம் மகளையே சென்று சேரும்.

ஒருவரின் தாய் -தந்தையர் அல்லது தாத்தா - பாட்டி இறந்த பிறகு, அவர்கள் நிச்சயம் வேறு ஜென்மம் எடுக்க வாய்ப்பு உண்டு என்பது இந்து மதத்தின் நம்பிக்கை. அப்படி இருக்கையில் மீண்டும் பிறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சரியாகுமா? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. மேலும் அப்படி நாம் அவர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணம் அவர்களுக்குப் போய் சேருமா? அதன் மூலம் நமக்கு புண்ணியம் கிடைக்குமா? என்ற கேள்விகளும் எழுகின்றன. தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா மறுபிறவி எடுத்தால் கூட, நாம் செய்யக்கூடிய எள் தர்ப்பண பலனை, பித்ரு தேவதைகள் ஏற்றுக்கொண்டு, நமக்கு புண்ணியத்தை தருகிறார்கள் என்பதுதான் உண்மை.

யார், யாருக்கு..

பொதுவாக 12 பேர்களுக்கு நாம் தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்கள்தான் நம் முன்னோர்கள். அதன்படி

1) பிதா - அப்பா

2) பிதாமஹர் - பாட்டனார்

3)பிரபிதாமஹர் - பாட்டனாருக்கு தகப்பனார்

4) மாதா-அம்மா

5) பிதாமஹி - பாட்டி

6) பிரபிதாமஹி - பாட்டனாருக்கு தாயார்

7) மாதாமஹர் - அம்மாவின் தகப்பனார்

8) மாது: பிதாமஹர்- தாய்ப் பாட்டனாருக்குத் தகப்பனார்

9) மாது: பிரபிதாமஹர் - தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டனார்

10) மாதாமஹி - பாட்டி (தாயாருக்கு தாயார்)

11) மாது: பிதாமஹி - தாய்ப் பாட்டனாருக்குத் தாயார்

12) மாது: பிரபிதாமஹி - தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டி

தர்ப்பணம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன், யார் யாருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களின் பெயர், கோத்ரம் போன்றவற்றை தெரிந்து கொண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். பெயர் தெரியாவிட்டால், ஆண்களுக்கு 'நாராயணா' என்றும், பெண்களுக்கு 'லட்சுமி' என்றும் சொல்லும் வழக்கமும் உண்டு.

மகாளய அமாவாசை தர்ப்பணத்தை, பசு கொட்டகை, பக்தர்கள் கூடக் கூடிய பொது இடங்கள், நதிக்கரை, சமுத்திரக்கரை, குளக்கரை, கோவில் மண்டபங்கள், புண்ணிய தலங்கள் ஆகியவற்றில் செய்வது விசேஷமானதாகும். சமுத்திரக்கரையில் செய்யும் பொழுது உப்பு நீரைக் கொண்டு தர்ப்பணம் செய்யக்கூடாது.

கயா சென்று சிரார்த்தம் செய்ய முடியாதவர்கள், கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது வரக்கூடிய பரணி நட்சத்திரம் அன்று (மகா பரணி என்று அழைப்பார்கள்) சிரார்த்தம் செய்தால், அஷ்டகயா ஷேத்திரங்களுக்கு சென்று, பல்குனி நதி, அட்சயவடம் போன்ற இடத்தில் பிண்ட பிரதானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

Tags:    

Similar News