மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா
- 13-ந்தேதி பக்தர்கள் மாங்கனிகளை இறைக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
- 14-ந்தேதி அதிகாலை அம்மையார் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சிவபெருமான் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு விழா நேற்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. முன்னதாக, பரமதத்த செட்டியார் ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து நேற்று மாலை மாப்பிள்ளை கோலத்தில் ஊர்வலமாக புறப்பட்டு இரவு காரைக்கால் அம்மையார் மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய நிகழ்ச்சியாக 12-ந்தேதி காலை 11 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், அன்று மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர்(சிவன்) வெள்ளை சாத்தி புறப்பாடு நிகழ்ச்சியும், 13-ந் தேதி பிச்சாண்ட மூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 7 மணிக்கு, பிச்சாண்டவர் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும், அதேசமயம், பக்தர்கள் மாங்கனிகளை இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
அன்று மாலை 6 மணிக்கு பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14-ந்தேதி அதிகாலை அம்மையார் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
விழா ஏற்பாடுகளை, காரைக்கால் கைலாசநாதர் கோவில் அறங்காவல் வாரிய த்தலைவர் வக்கீல் வெற்றிசெல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கில் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பி-னர் ஜெயபாரதி ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.