வழிபாடு
காரைக்கால் அம்மையார் கோவிலில் இன்று மாங்கனி திருவிழாவையொட்டி மாங்கனிகளை பக்தர்கள் வாரி இறைத்த காட்சி.

காரைக்கால் அம்மையார் கோவிலில் நடந்த மாங்கனி திருவிழா

Published On 2022-07-13 07:40 GMT   |   Update On 2022-07-13 07:40 GMT
  • சாலையில் இரு புறங்களிலிருந்து மாங்கனிகளை பக்தர்கள் மீது வாரி இறைத்தனர்.
  • நாளை (14-ந்தேதி) அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இறைவனின் திருவாயால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவரும், 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில், காரைக்கால் பாரதியார் வீதியில் கோவில் கொண்டு அருள்பாலித்துவரும், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா ஊரடங்கு காரணமாக, மாங்கனித்திருவிழா, கைலாசநாதர் கோவில் உள்ளேயே, பக்தர்கள் இன்றி மிக எளிமையாக கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டுக்கான மாங்கனித்திருவிழா கடந்த 11-ந் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. மாங்கனித்திருவிழாவின் இரண்டாம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 11 மணிக்கு, காரைக்கால் அம்மையார் கோவில் மண்டபத்தில், காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அம்மையாரின் மாங்கனி அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.

திருவிழாவின் மூன்றாம் நாள் முக்கிய நிகழ்சியாக, இன்று (13-ந் தேதி)காலை 7 மணிக்கு பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடு மற்றும் மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. காலை 10 மணிக்கு மேல் கைலாசநாதர் கோவில் எதிரியே பவளக்கால் சப்பரத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதி உலா புறப்பட்டார்.

அப்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொறுட்டு வீட்டு வாசல், மாடி மற்றும் சாலையில் இரு புறங்களிலிருந்து மாங்கனிகளை பக்தர்கள் மீது வாரி இறைத்தனர். அந்த மாங்கனிகளை திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர். இந்த மாங்கனிகளை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் ஏராளமான பெண்களும் விழாவில் கலந்து கொண்டு மாங்கனிகளை எடுத்துச் சென்றனர். பவளக்கால் சப்பரம் காரைக்கால் பெருமாள் வீதி, பாரதியார் வீதி, கென்னடி யார் வீதி, மாதா கோவில் வீதி, லெமேர் வீதி மீண்டும் பாரதியார் வீதி வழியாக இரவு காரைக்கால் அம்மையார் கோவிலை சென்றடைந்தது.

அதன்பின்னர், பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து சென்று, அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை (14-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Tags:    

Similar News