வழிபாடு

மார்கழி வழிபாடு, திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-18)

Published On 2024-01-03 03:39 GMT   |   Update On 2024-01-03 03:39 GMT
  • நறுமணம் வீசும் கூந்தலை உடையவளே!
  • திருவண்ணாமலையில் ஜோதிமயமாக விளங்கும் சிவபெருமான்.

திருப்பாவை

பாடல்

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,

நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்;

வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;

பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,

செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப

வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

விளக்கம்

மதயானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத வலிமையான தோள்களை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னையே? நறுமணம் வீசும் கூந்தலை உடையவளே! கதவைத் திறப்பாயாக! பொழுது புலர்வதற்கு அறிகுறியாக கோழிகள் கூவும் சத்தம் எங்கும் கேட்கிறது. குருகத்தி கொடி பந்தல் மேலே அமர்ந்து, குயில்கள் கூவிக்கொண்டு இருக்கின்றன. மென்மையாக பந்து விளையாடும் அழகிய விரல்களை உடையவளே! உன் கணவனின் புகழ்பாட வந்துள்ளோம். நீ கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலி செய்ய, செந்தாமரை மலர் போன்ற சிவந்த கரங்களால் கதவைத் திறப்பாயாக!

திருவெம்பாவை

பாடல்

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகைவீறற்றாற்போல்

கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்

தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்

பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்

கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்

பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

விளக்கம்

திருவண்ணாமலையில் ஜோதிமயமாக விளங்கும் சிவபெருமானின் திருவடிகளை ரத்தின கற்கள் பதித்த மகுடத்தோடு தேவர்கள் பணிந்து வணங்கினர். இறைவனின் ஒளிக்கு முன்னர் அவர்கள் அணிந்துள்ள ரத்தினங்கள் ஒளியை இழந்தன. அதைப்போல வானில் சூரியன் தோன்ற அதன் கதிர்களால் இருள் நீங்கியது. நட்சத்திரங்கள் தனது ஒளியை இழக்கும் காலை வேளையில், ஆணாகவும், பெண்ணாகவும், அலியாகவும், வானாகவும், மண்ணாகவும், உலகம் கடந்த பொருளாகவும், அடியார்களுக்கு அமுதமாகவும் விளங்கும் இறைவனின் திருவடிகளை பாடிக்கொண்டே பூக்கள் நிறைந்த பொய்கையில் பாய்ந்து நீராடுவோம்.

Tags:    

Similar News