மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-24)
- வாமன அவதாரத்தில் உலகை அளந்தவனே! உன் திருவடிகளை வணங்குகிறோம்.
- திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே!
திருப்பாவை
பாடல்
அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,
குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,
என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்
விளக்கம்
வாமன அவதாரத்தில் உலகை அளந்தவனே! உன் திருவடிகளை வணங்குகிறோம். சீதையை மீட்க இலங்கை சென்று ராவணன் உள்ளிட்ட அரக்கர்களை அழித்த உன் திறமையை போற்றுகிறோம்! சக்கர வடிவத்தில் உன்னை கொல்வதற்கு வந்த சகடாசுரனை கொன்றாய். உன் புகழை வணங்குகிறோம். வண்டு வடிவில் வந்த வத்சாசூரனை தடியால் அடித்துக்கொன்றாய். உன் திருவடியை வணங்குகிறோம். கோவர்த்தனம் எனும் மலையை குடையாக்கி கோகுலத்தை காப்பாற்றினாய். பகைவர்களை வெற்றி கொள்ளும் உன் வேலையும் போற்றி வணங்குகிறோம். உன் பெருமைக்குரிய செயல்களை எல்லாம் எடுத்துக் கூறி எங்கள் நோன்புக்குரிய வேண்டுதல்களை பெற்றுக்கொள்ள வந்துள்ளோம். உன் அருளைப் பெற வந்த எங்களுக்கு மனம் இறங்கி அருள்புரிய வேண்டும்.
திருவெம்பாவை
பாடல்
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
விளக்கம்
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! பொழுது விடிந்தது! உன்னை வணங்குவதற்காக வீணை மற்றும் யாழ் கருவிகளை இசைக்கும் இசைக்கலைஞர்கள் ஒரு பக்கம் உள்ளனர். வேத மந்திரங்கள் ஒதுவோரும், தமிழ் தோத்திரப் பாடல்கள் பாடுவோரும், மலர் மாலையை கையில் ஏந்தி கொண்டு இருப்பவர்களும் உன் சிறப்பை பாடிக்கொண்டு உள்ளனர். உன்னை தொழுபவர்களும், அருள் வேண்டி அழுபவர்களும், துன்பத்தில் துவண்டவர்களும், நீயே சரணாகதி என்று தலையில் கைவைத்து வணங்குபவர்களும் உன்கோவிலில் சூழ்ந்து நிற்கிறார்கள். இவர்களது பக்தியின் முன் நான் சாதாரணமானவன். அப்படிப்பட்ட என்னையும் ஆட்கொண்டு அருள்பவனே! உனது திருப்பள்ளியில் இருந்து எழுந்து அருள்புரிவாயாக.