சிதம்பரம் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கொடியேற்றம்
- 30-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- தீமிதி திருவிழா 31-ந்தேதி நடக்கிறது.
சிதம்பரம் தம்பரத்தில் உள்ள கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ஆடி மாதந்தோறும், தீ மிதி திருவிழா நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் முன்பு அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். பின்னர், கொடிமரத்தில் விழா கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில், நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) மாலை தெருவடைச்சான் உற்சவமும், 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை தேரோட்டமும், சிகர திருவிழாவான தீ மிதி திருவிழா 31-ந்தேதி(திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு மேல் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 1-ந்தேதி விடையாற்றி உற்சவமும், 2-ந்தேதி மாலை மஞ்சள் நீர் விளையாட்டும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவுடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு பிரேமா வீராசாமி, என்.கலியமூர்த்தி ஆகியோர் செய்துவருகின்றனர்.